பட்டாசுத் தொழிலை பாதுகாக்க மத்திய-மாநிலஅரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கிருஷ்ணாபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது மாநாடு மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற சி. மகேந்திரன், பின்னர் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது:
சென்னை ஆர்.கே. நகரில் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடக்கவில்லை என்பதால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. எனவே, புதிய தேர்தல் சீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான அனைத்து செலவும் அரசே ஏற்கவேண்டும் என்று இந்திரஜித் குப்தா கமிஷன் அறிவித்தது. அதை அமல்படுத்த வேண்டும்.
தமிழக இளைஞர்கள், பணம் கொடுத்து ஓட்டு வாங்கிய இந்தத் தேர்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.
தமிழகத்தில் இருக்கக் கூடிய ஊழல், லஞ்சம், வருமான வரி ஏய்ப்பு ஆகியவற்றின் மீதான நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அரசியல் காரணங்களுக்காக பாஜக நடவடிக்கை எடுப்பதை நாங்கள் கண்டிக்கிறோம்.
விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலுக்கான தடை தற்போது பதற்றமான நிலையை ஏற்படுத்தி உள்ளது. நீதிமன்றத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்ட தடையால் நாட்டின் பெருமளவு வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசுத் தொழிலையே அழிக்கக் கூடாது. வருமானம் இல்லாமல் மக்கள் பட்டினி கிடந்து சாவதை ஏற்றுக் கொள்ளமாட்டோம். எனவே, மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, நீதிமன்றத் தடைகளை விலக்கி பட்டாசுத் தொழில் சிறப்பாக நடக்க தேவையான வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.
ராஜபாளையம், சத்திரப்பட்டி, தளவாய்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாதாரண கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஜவுளி மற்றும் நெசவு தொழிலே வாழ்வாதாரமாக உள்ளது. தற்போது, ஜி.எஸ்.டி.யால் தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னையை தீர்க்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
தொடர்ந்து, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் பி.எம். ராமசாமி பேசுகையில், பஞ்சாலை தொழிலாளர்களின் நல உரிமைகளைப் பாதுகாக்க, அவர்களுக்கான சட்டங்களை சரிவர அமல்படுத்த வேண்டும் என்றார்.
மாநாட்டில், முன்னாள் எம்.பி.க்கள் பொ. லிங்கம், அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. தி.ராமசாமி உள்பட பலர் பேசினர். மேலும், இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.