விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் ஆட்சியர் கூறியது: தமிழக அரசு உத்தரவுபடி டெங்கு கொசு ஒழிக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதற்காக விருதுநகர் மாவட்டத்தில் சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநர், துணை ஆட்சியர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், டெங்கு ஒழிப்புப் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வீடுவீடாகச் சென்று டெங்கு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கொசுப்புழுக்கள் உருவாவதை தடுக்க தவறும் பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரக்கடைகளுக்கு எடுத்து சொல்வது மட்டுமின்றி, அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், வீடுகள் மற்றும் கட்டடங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீரை உறிஞ்சுகுழி அமைப்புகள் மூலம் நிலத்தடிக்குள் செலுத்தாமல் திறந்தவெளியில் வெளியேற்றக்கூடாது. கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது. குளியல் அறையில் உள்ள தொட்டிகளில் டெங்கு லார்வாக வளரா வண்ணம் மூன்று நாட்களுக்கு ஒருமுறை பிளிச்சிங் பவுடரால் சுத்தப்படுத்த வேண்டும். வீட்டின் மாடியில் குடிநீர் தொட்டியில், நீர் நிரம்பியவுடன் வெளியேறும் குழாய் மற்றும் வெளியேறும் குழாய்கள் ஆகியவற்றை கொசு வலை மூலம் கட்டி கொசு உட்புகாவண்ணம் செய்தல் வேண்டும். கொசு ஒழிப்புப் பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டிலும் கொசுப்புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளும்போது வீட்டின் உரிமையாளர்களையும், கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடுத்தி வருங்காலங்களில் அவர்களே தங்களின் வீடுகளில் கொசு புழு உற்பத்தியாகாத வண்ணம் தடுக்கப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக ஆட்சியர், விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவப் பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு, செவிலியர் பயிற்சி பள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். அரசு தலைமை மருத்துவமனையை சுற்றி உள்ள தேவையற்ற பொருள்கள் துப்புரவு பணியாளர்களை கொண்டு அகற்றப்பட்டது.
இந்த ஆய்வின் போது இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மனோகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) காதர்மீர், துணை இயக்குநர்(நோய் தடுப்பு மற்றும் பொது சுகாதாரம்) பழனிச்சாமி , விருதுநகர் வட்டாட்சியர் சையது இப்ராஹிம் ஷா, நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.