
காரியாபட்டி, திருச்சுழியில் சவுடுமண் என்ற பெயரில் மணல் கடத்தல்: ஆட்சியரிடம் விவசாயிகள் புகார்
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் சவுடு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று மணல் கடத்துவதால்
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, திருச்சுழி பகுதிகளில் சவுடு மண் அள்ளுவதற்கு அனுமதி பெற்று மணல் கடத்துவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் முருகன் பேசியது: விவசாயிகள் வங்கியில் கடன் கேட்டால், 10 க்கு 1 அடங்கல் இருந்தால் தான் தர முடியும் என்கின்றனர். எனவே, விவசாயிகளுக்கு அடங்கல் இன்றி கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், காரியாபட்டி, திருச்சுழி பகுதியில் உள்ள உடையனேந்தல், சேதுபுரம், தோப்பூர், முருகையாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் சவுடு மண் என்ற பெயரில் தினமும் 300 -க்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. அதில், சுமார் 15 அடி ஆழம் வரை மணல் அள்ளுவதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் வேகமாக செல்லும் மணல் லாரிகளால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. திருச்சுழி அருகே புதன்கிழமை மணல் லாரி மோதியதில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் என்றார்.
ஆட்சியர் பேசியது: விவசாயிகள் அடங்கல் இன்றி வங்கியில் கடன் பெற்றுக் கொள்ளலாம். அதேநேரம், அடங்கல் கிடைத்தவுடன் வங்கியில் அதை வழங்க வேண்டும். மேலும், சவுடு மண் அனுமதியின் பேரில் மணல் அள்ளினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா பேசியது: விருதுநகர் மாவட்டத்தில் மண் வள அட்டை விவசாயிகளுக்கு கொடுக்கவில்லை. தரமான விதைகள் கிடைப்பதில்லை. விதை விற்பனை கடைகளில், முறையான விலைப் பட்டியல் வைப்பதில்லை என்றார்.
வேளாண் துறை அலுவலர்கள்: விவசாயிகளுக்கு தேவையான நெல் அறுவடை இயந்திரம் உள்பட அனைத்து இயந்திரங்களும் வாங்கி அவற்றை விவசாயிகளுக்கு குறைந்த வாடகைக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும். விதை விற்பனை கடைகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில், விலைப் பட்டியல் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் அ.விஜயமுருகன்: வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். குடிமராமத்து பணியில் 59 கண்மாய்கள் ரூ. 18.97 கோடிக்கு தூர்வாரப்பட்டு வருவதாக பொதுப் பணித்துறையினர் கூறுகின்றனர். ஆனால், இப்பணிக்காக தேர்வு செய்யப்பட்ட கண்மாய்களில் முறையான பணிகள் நடைபெற வில்லை என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கோ. உதயகுமார், வேளாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





