
அருப்புக்கோட்டையில் நெகிழிப்பை பயன்பாட்டுக்குத் தடை குறித்து உணவு வணிகர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
அருப்புக்கோட்டை வர்த்தகர் சங்கக் கட்டட வளாகத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை
அருப்புக்கோட்டை வர்த்தகர் சங்கக் கட்டட வளாகத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் நெகிழிப்பை தடை குறித்த உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு விருதுநகர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் டி.அனுராதா தலைமை வகித்துப் பேசியதாவது: தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தி வீசி எறியும் நெகிழிப்பை, நெகிழியினாலான பொருள்கள் பயன்பாட்டுக்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதில் உணவு வணிகர்களே மிகஅதிகம் நெகிழிப்பை பயன்படுத்துவதாக வந்த தகவலை அடுத்து இந்த விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
தேநீர்க் கடைகளில் பயன்படுத்தப்படும் நெகிழிப்பைகள், குவளைகள், தண்ணீர் உறைகள், உணவகங்களில் பயன்படுத்தப்படும் நெகிழிப்பூச்சுள்ள அட்டைத்தட்டுகள், தெர்மாக்கோலால் ஆன தட்டுகள், சிறிய, பெரிய கரண்டிகள், நெகிழிக் கிண்ணங்கள் ஆகியவை 51 மைக்ரானுக்கு மேற்பட்டவையாக இருந்தாலும் அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் பால் பாக்கெட்டுகள், எண்ணெய் பாக்கெட்டுகளுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. கடலை மிட்டாய் உள்ளிட்ட நொறுக்குத் தீனிப் பாக்கெட்டுகளுக்கு முதல் ஒரு உறையை மட்டும் தற்காலிகமாக பயன்படுத்தினாலும் அதற்கு மாற்று தமிழக அரசால் விரைவில் அறிவிக்கப்படும்.
சுருக்கமாகச் சொன்னால் இனி நெகிழிப்பையை எந்த அளவு மைக்ரான் அளவிலிருந்தாலும் அதை உணவகங்கள், தேநீர்க்கடைகள் பயன்படுத்தக் கடாது.
அதேசமயம் அவற்றுக்கு மாற்றாக அரசு அங்கீகரித்த மறுசுழற்சிக்கு உள்படுத்தலாம் எனும் வகை நெகிழியினாலான கிண்ணங்கள், குவளைகள், பொருள்கள் ஆகியவற்றில் மறுசுழற்சி என்பதைக் காட்டும் முக்கோணத்துடன் 2, 4 மற்றும் 5 என எண்கள் குறிப்பிடப்பட்ட நெகிழிவகைப்பொருள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் மரத்தாலான சிறு கரண்டிகள், பாக்கு மட்டையாலான பொருள்கள்,துணிப்பைகள் ஆகியவற்றை மட்டுமே இனி பயன்படுத்தலாம் என்றார்.
கூட்டத்துக்கு அருப்புக்கோட்டை மற்றும் ஒன்றியப் பகுதி உணவுப் பாதுகாப்பு அலுவலர் காசீம், அருப்புக்கோட்டை வர்த்தகர் சங்க துணைத் தலைவர் மாணிக்கவாசகம், செயலர் என்.சங்கரநாராயணன், உதவிச் செயலர் மயில்ச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதனைத் தொடர்ந்து உணவு வணிகர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அருப்புக்கோட்டை வர்த்தகர் சங்கத் துணைத் தலைவர் மாணிக்கவாசகம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




