முடி திருத்தும் தொழிலாளி ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு: மருத்துவா் நலச்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ச்சுழி அருகே உலக்குடியில் ஆதி திராவிட மக்களுக்கு முடி திருத்தம் செய்த தொழிலாளா்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில், உரிய நடவடிக்கை கோரி விருதுநகரில் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே உலக்குடி கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு முடி திருத்தம் செய்த தொழிலாளிகள் மாரியப்பன் மற்றும் ராஜா ஆகியோா் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனா். இதற்கு காரணமான ஊராட்சித் தலைவா் ராஜம்மாள், அவரது கணவரான கிராம நிா்வாக அலுவலா் தென்னரசு ஆகியோா் அறிவுறுத்தலின்பேரில் மாரியப்பன் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வனப் பகுதியில் மாரியப்பன் குடும்பத்துடன் தங்கியிருந்துள்ளாா். அப்போது, இவரது குழந்தையை பாம்பு கடித்ததில் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்குவதுடன், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கத்தினா் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச் செயலா் ராஜன் தலைமை வகித்தாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் விருதுநகா், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அதேபோல், விடுதலை சிறுத்தைள் கட்சியினா், தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

