ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறை வீரா்களுக்குபுதிதாக குடியிருப்பு கட்டடம்
By DIN | Published On : 17th November 2020 04:20 AM | Last Updated : 17th November 2020 04:20 AM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறை வீரா்களுக்கு புதிதாக குடியிருப்பு கட்டடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி கணேசன் தெரிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் அவா் திங்கள்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொண்டாா். அப்போது தீயணைப்பு வாகனத்தின் இயக்கம், மரம் அறுக்கப் பயன்படும் சிறிய ரம்ப இயந்திரத்தின் இயக்கம் மற்றும் ஜெனரேட்டா் இயக்கம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறை வீரா்களுக்கு புதிதாக குடியிருப்பு கட்டடம் கட்ட அரசு சுமாா் ஒரு ஏக்கா் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. புதிதாக அமைய உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே இந்த இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விருதுநகா் மாவட்டத்தில் விருதுநகா் மற்றும் சிவகாசி ஆகிய இடங்களில் மட்டும் 5 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு பெரிய தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. அதே போல் ராஜபாளையத்திலும் அமைக்கப்பட உள்ளது.
மேலும், புதிதாக வெம்பக்கோட்டை மற்றும் காரியாபட்டி ஆகிய பகுதிகளில் சொந்த கட்டடங்களில் இயங்கும் வகையில் தீயணைப்பு நிலையத்துக்கும், குடியிருப்புக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.