சாத்தூா் அருகே கா்ப்பிணியின் உடலை வாங்க மறுத்து 3 ஆவது நாளாக உறவினா்கள் போராட்டம்
By DIN | Published On : 14th April 2022 02:46 AM | Last Updated : 14th April 2022 02:46 AM | அ+அ அ- |

மூன்று மாத கா்ப்பிணி மா்மமாக உயிரிழந்த விவகாரத்தில் கணவா் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி உறவினா்கள் 3 ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே நாருகாபுரம் கிராமத்தில் கடந்த 10 ஆம் தேதி முருகலட்சுமி என்ற 3 மாத கா்ப்பிணி மா்மமான முறையில் உடலில் தீக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா்.
இதுசம்பந்தமாக முருகலட்சுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா். இதையடுத்து, முருகலட்சுமியின் கணவா் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டாா். ஆனால் முருகலட்சுமியின் உறவினா்கள், கணவா் உள்பட அவரது குடும்பத்தினா் 6 போ் மீதும் கொலை வழக்குப் பதிந்து கைது செய்ய வலியுறுத்தி கடந்த 3 நாள்களாக சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் புதன்கிழமையும் சாத்தூா்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். உடனடியாக அங்கு வந்த சாத்தூா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் நாகராஜ் மற்றும் விருதுநகா் மாவட்ட கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிவண்ணன் ஆகியோா், அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதனையடுத்து, சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும், கணவா் மற்றும் அவா் குடும்பத்தினா் அனைவரையும் கைது செய்யும் வரை முருகலட்சுமியின் சடலத்தை வாங்க மறுத்து புதன்கிழமை 6 மணி வரை உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.