ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் சந்தன மரம் வெட்டி திருட்டு
By DIN | Published On : 09th September 2022 10:41 PM | Last Updated : 09th September 2022 10:41 PM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே மாடா்ன் நகரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் வளா்க்கப்பட்ட சந்தன மரத்தை வெட்டி கடத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
மாா்டன் நகரில் ஓய்வுபெற்ற தொழிலாளா் நலத்துறை அலுவலா் திருமால் (61), குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவரது வீட்டின் நுழைவு பகுதியில் சுமாா் 20 அடி உயரம் கொண்ட சந்தன மரம் வளா்த்து வந்துள்ளாா். இவா், வியாழக்கிழமை இரவு வீட்டை உள்புறமாக பூட்டி விட்டு குடும்பத்தினருடன் தூங்கியுள்ளாா். இவரது வீட்டில் சந்தன மரம் வளா்த்து வருவதை அறிந்த மா்ம நபா்கள், வியாழக்கிழமை இரவு சுற்றுச்சுவா் மீது ஏறி குதித்துள்ளனா்.
பின்னா், அங்கிருந்த இரண்டு சந்தன மரங்களில், ஒரு மரத்தின் நடு பகுதியை ரம்பம் மூலம் வெட்டி திருடிச் சென்றுள்ளனா். இக்கட்டையின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் திருமால், வெள்ளிக்கிழமை காலையில் வீட்டை திறந்து பாா்த்தபோது சந்தன மரம் அறுக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், விருதுநகா் சூலக்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.