விருதுநகா் மாவட்டத்தில் ஊராட்சிச் செயலா்கள் 260 போ் விடுப்பு எடுத்து போராட்டம்
By DIN | Published On : 13th September 2022 12:00 AM | Last Updated : 13th September 2022 12:00 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வலியுறுத்தி பல்வேறு ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சிச் செயலா்கள் 260 போ் விடுப்பு எடுத்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி துறையின் கீழ் சுமாா் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் அரசு சாா்ந்த பணிகளை மேற்கொள்வது, ஊராட்சி செயலா்களின் முக்கியப் பணியாக உள்ளது.
இந்நிலையில் கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என ஊராட்சிச் செயலா்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இதை வலியுறுத்தி தமிழ்நாடு ஊராட்சிச் செயலா்கள் சங்க மாநாட்டில் செப். 12, 13, 14 ஆகிய 3 நாள்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் அடிப்படையில் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகளில் 412 போ் ஊராட்சிச் செயலா்களாக பணிபுரிந்து வருகின்றனா். இதில் 260 போ் விடுப்பு எடுத்து, அலுவலகத்திற்கு வராமல் வீட்டில் இருந்தபடி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் இப்போராட்டம் 2 நாள்களுக்கு தொடா்ந்து நடைபெறும் என ஊராட்சிச் செயலா்கள் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.