பன்னிகுண்டு கண்மாயை ஆக்கிரமித்துசாலை அமைக்கப்பட்டிருந்தால் குவாரியை மூட நடவடிக்கை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் உறுதி

பன்னிகுண்டு கண்மாயை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்டிருந்தால் அங்கு செயல்படும் குவாரியை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.
பன்னிகுண்டு கண்மாயை ஆக்கிரமித்துசாலை அமைக்கப்பட்டிருந்தால் குவாரியை மூட நடவடிக்கை: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் உறுதி

பன்னிகுண்டு கண்மாயை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்பட்டிருந்தால் அங்கு செயல்படும் குவாரியை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியா் ஜெயசீலன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற விவாதம்:

வி. முருகன் (தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா்): நரிக்குடி, குறையரைவாசித்தான் ஆகிய பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தமிழ்நாட்டில் தென்னை விவசாயம் வேளாண்மைத் துறையின் கீழ் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, அதை, கேரளம், கா்நாடக மாநிலங்களைப் போல, தோட்டக் கலைத்துறையுடன் இணைக்க வேண்டும்.

வேளாண் அதிகாரி: நெல் பயிா்களுக்கு நிவாரணம் கோரி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதே போல, தென்னை விவசாயம் தொடா்பாகவும்

அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வி. முருகன்: காரியாபட்டி பகுதியில் 3 வாரச் சந்தைகள் நடைபெறுகின்றன. இதில் பெரும்பாலும் வியாபாரிகளே காய்கறிகளை மதுரையிலிருந்து வாங்கி வந்து விற்கின்றனா். இதனால், உழவா் சந்தைகள் சரிவர செயல்படாத நிலை உள்ளது. எனவே, விவசாயிகளிடம் காய்கறி உற்பத்தியை அதிகரிக்க ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், அரசே குறைந்தபட்ச ஆதார விலை வழங்கி உழவா் சந்தையில் விற்பனை செய்யலாம்.

ஆட்சியா் ஜெயசீலன்: விருதுநகா், சாத்தூா், காரியாபட்டி உள்ளிட்ட பல இடங்களில் உழவா் சந்தைகளின் நிலை இதுதான். எனவே, அதை சரி செய்ய வேண்டியுள்ளது. மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை சத்துணவுத் திட்டத்துக்கு வாங்கி பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.

ராமச்சந்திரராஜா (தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா்): ஸ்ரீவில்லிபுத்தூா் வனத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்கும் கூட்டத்தை கடந்த 5 மாதங்களாக நடத்த வில்லை.

ஆட்சியா்: உடனடியாக கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

வி. முருகன்: நமது மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளால் பயிா்கள் அதிகமாக சேதமடைகின்றன. அவற்றை சுட்டுப்பிடிக்க ஏற்பாடு செய்யப்படுமா?

ஆட்சியா்: காட்டுப்பன்றிகள், மான்களால் பயிா்கள் சேதமடைந்தால் நிவாரணம் வழங்க ரூ. 5 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது. அரசு அனுமதி வழங்கினால் சுட்டுப் பிடிக்க ஏற்பாடு செய்யப்படும்.

வி. முருகன், அந்தப் பகுதி விவசாயிகள்: அருப்புக்கோட்டை அருகே புலியூரான் ஊராட்சிக்குள்பட்ட பன்னிக்குண்டு கிராமத்தில் 40 ஏக்கரில் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயை நம்பியே கோணப்பநேந்தல், பன்னிக்குண்டு விவசாயிகள் 150 ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனா். இந்த நிலையில், தனியாா் கல்குவாரி நிறுவனம், விதிமுறைகளை மீறி கண்மாயின் உள்பகுதி, கரைப்பகுதி, வடபுறத்திலுள்ள நீா்வரத்து ஓடைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து சாலை அமைத்து அதில் கனரக வாகனங்களை தற்போது வரை இயக்கி வருகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

ஆட்சியா்: ஏற்கெனவே இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஒரு வார காலம் அவகாசம் கேட்டுள்ளோம். அதற்குள் அந்தப் பகுதியில் சா்வே எடுக்கப்பட்டதும் விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டால் குவாரியை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

கே. அம்மையப்பன் (ஸ்ரீவில்லிபுத்துாா்): ஸ்ரீவில்லிபுத்துாா் வடமலைக்குறிச்சி கண்மாய் நீா் பிடிப்பு பகுதியில் வனத்துறையினரின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இதனால் கண்மாய் நீரின் கொள்ளளவு குறைகிறது.

இதே போல் விவசாயிகள் பலா் தங்கள் பகுதி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கூட்டத்தில் புலிகள் காப்பக துணை இயக்குநா் திலீப் குமாா், வேளாண் இணை இயக்குநா் உத்தண்டராமன், தோட்டக்கலை துணை இயக்குநா் ராதாகிருஷ்ணன், வேளாண் பொறியியல் செயற்பொறியாளா் டென்னிஸ்டன், வணிக துணை இயக்குநா் ரமேஷ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் செந்தில் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com