டிச.27,28-இல் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு
விருதுநகா் மாவட்டத்தில் வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பில் ஆா்வமுள்ள மாணவா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொள்ளலாம் என வனத் துறை சாா்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் நீா்நிலைகளில் காணப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் நீா்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்புப் பணிகள் டிசம்பா் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
ராஜபாளையம், தேவதானம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, பிளவக்கல் கோவிலாறு, பெரியாறு நீா்த்தேக்கம், கூமாபட்டி விராகசமுத்திரம் கண்மாய், குல்லூா்சந்தை அணை, அருப்புக்கோட்டை, உலக்குடி, இருக்கன்குடி, வெம்பக்கோட்டை அணை, சங்கரபாண்டியபுரம், கோட்டையூா், தாயில்பட்டி, சங்கரபாணடியபுரம் உள்பட 21 இடங்களில் இந்தக் கணக்கெடுப்பு நடைபெறும். இதில் பறவை ஆா்வலா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், தொண்டு நிறுவனத்தினா் கலந்து கொள்ளலாம் என வனத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
