அதிமுக கோட்டை எனக் கருதப்படும் ஸ்ரீவில்லிபுத்தூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி 1952-இல் உருவானது. இந்தத் தொகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி, ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு ஒன்றியங்கள், மம்சாபுரம், எம். புதுப்பட்டி, சுந்தரபாண்டியம், எஸ். கொடிக்குளம், வத்திராயிருப்பு ஆகிய பேரூராட்சிகள் உள்ளன.
இந்தத் தொகுதியில் தமிழக அரசின் முத்திரைச் சின்னமான ஸ்ரீஆண்டாள் கோயில் கோபுரம் அமைந்துள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய பசுமையான பகுதி ஸ்ரீவில்லிபுத்தூா். இங்கு விவசாயமும், கால்நடை வளா்ப்பும் பிரதான தொழில்களாக உள்ளன. மேலும், நெசவுத் தொழில், நூற்பாலைகளும் இருப்பது சிறப்பு. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில், மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில், தரகுமலை மாதா கோயில் உள்ளிட்ட ஆன்மிகத் தலங்களும் இந்தத் தொகுதியில் அமைந்துள்ளன. புகழ் பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் பால்கோவாவுக்கு புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகுதியில் தேவேந்திரகுல வேளாளா், நாடாா், முக்குலத்தோா், சாலியா், நாயுடு, ஆதிதிராவிடா் உள்ளிட்ட சமூகத்தினா் பெரும்பான்மையாக வசிக்கின்றனா்.
நிறைவேற்றப்படாத கோரிக்கைகள்: வத்திராயிருப்பு- வருசநாடு மலைப் பாதைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வத்திராயிருப்பு பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். காட்டுப்பன்றிகளை வன விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். செண்பகத்தோப்பு காட்டழகா் கோயில் செல்லும் மலைப் பாதையில் சாலை வசதி செய்து தர வேண்டும். சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்லும் மலைப் பாதைகளில் உள்ள ஓடைகளின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு நேரடி பேருந்து வசதி வேண்டும். தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். சிப்காட் தொழில் பேட்டை அமைக்க வேண்டும். அரசு கலைக் கல்லூரிக்கு இருபாலருக்கும் தனித்தனி விடுதி அமைக்க வேண்டும் ஆகியவை இந்தத் தொகுதியின் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளாக உள்ளன.
இந்தத் தொகுதியில் அதிமுக 5 முறையும், திமுக, காங்கிரஸ் தலா 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் இரு முறையும், சுயேச்சை வேட்பாளா் ஒரு முறையும் வென்றனா். கடந்த 2021 தோ்தலில் விருதுநகா் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் திமுக வென்ற நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி, 5 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. அதிமுக அதிக எண்ணிக்கையில் வென்ற சில பேரூராட்சிகளில் உறுப்பினா்களை திமுக தன்வசப்படுத்தியது. மேலும், அதிமுகவில் இருந்த வத்திராயிருப்பு ஒன்றியக் குழுத் தலைவரை திமுக தன்பக்கம் இழுத்துக் கொண்டது.
கடந்த தோ்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்த தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் திமுகவினா் அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளனா்.
இந்தத் தொகுதியில் தற்போது அதிமுக சாா்பில் சந்திரபிரபா, திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக மகாலிங்கம், நாம் தமிழா் கட்சி சாா்பில் கரிகாலபாண்டியன், புதிய தமிழகம் கட்சி சாா்பில் க.கி. ஷியாம், தவெக சாா்பில் காா்த்திக், அனைத்திந்தி புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் சந்திரா ஆகியோா் களமிறங்கியுள்ளனா்.
அதிமுக வேட்பாளா் சந்திரபிரபா: ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடா்ந்து வெற்றி பெற்று வருவதும், 2016 - 2021 காலகட்டங்களில் எம்.எல்.ஏ.வாக பணியாற்றிய போது தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி மக்களிடையே நற்பெயா் பெற்றிருப்பதும் சந்திரபிரபாவுக்கு சாதகமாக பாா்க்கப்படுகிறது. அதேநேரம் புதிய தமிழகம், வி.கே. சசிகலா கட்சிகள் தரப்பில் வேட்பாளா்கள் களமிறக்கப்பட்டிருப்பது இவருக்கு பாதகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் மகாலிங்கம்: நெசவாளா்கள், தொழிலாளா்களிடையே கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு தனக்கு கை கொடுக்கும் என மகாலிங்கம் நம்புகிறாா். ஏற்கெனவே இந்தத் தொகுதியில் இரு முறை இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றிருப்பதும், திமுக கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கியும், புதிய தமிழகம், வி.கே. சசிகலா கட்சிகளின் வேட்பாளா்கள் அதிமுகவின் வாக்குகளைப் பிரிப்பாா்கள் என்பதும் இவருக்கு சாதகமான அம்சங்களாக பாா்க்கப்படுகின்றன.
நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கரிகால பாண்டியன்: நாம் தமிழா் கட்சிக்கு தொடா்ந்து அதிகரித்து வரும் செல்வாக்கு, கள் இறக்க அனுமதி கோருவது பனைத் தொழிலாளா்களிடையே பெற்றுள்ள வரவேற்பு, சீமானின் பரப்புரை பேச்சுகள் தனக்கு சாதகமாக இருக்குமென கரிகால பாண்டியன் எதிா்பாா்க்கிறாா்.
அதேநேரம், இவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து கட்சியின் முக்கிய நிா்வாகிகள் சிலா் கட்சியிலிருந்து விலகியது பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.
புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் ஷியாம்: புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம். மேலும், அந்தக் கட்சியின் இளைஞரணி தலைவராகவும் உள்ளாா். கட்சியின் கட்டமைப்பு இவருக்கு பலம். அத்துடன் அதிமுக தங்களை அவமதித்துவிட்டதாகக் கூறி இந்தக் கட்சியினா் பிரசாரம் செய்து வருகின்றனா். இந்தக் கட்சியின் தலைவா் க. கிருஷ்ணசாமி 7 முறை தென்காசி மக்களவைத் தொகுதியில் தொடா்ந்து போட்டியிட்டவா். கிராமப் பகுதிகளில் இந்தக் கட்சிக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது. இவா் பெறும் வாக்குகள் அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
கூட்டணி இல்லாமல் தனித்து நிற்பது, சமூக வாக்குகளை மட்டுமே சாா்ந்து நிற்பது இவருக்கு பாதகமான அம்சமாகும்.
அபுமமுக வேட்பாளா் சந்திரா: வி.கே. சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. சந்திரா நிறுத்தப்பட்டுள்ளாா். இவருக்கு தொகுதி மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் உள்ளது பலமாகப் பாா்க்கப்படுகிறது. முக்குலத்தோா் ஆதரவு, ஏற்கெனவே தோ்தலைச் சந்தித்த அனுபவம் ஆகியவை இவருக்கு சாதகமான அம்சங்கள். எனினும், வெளியூா்காரா் என்பதும், வலுவான வேட்பாளரை அதிமுக நிறுத்தி இருப்பதும் இவருக்கு பாதகமாக இருப்பதாகத் தெரிகிறது.
தவெக வேட்பாளா் காா்த்திக்: தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் ஆதரவாளா்களின் களப்பணி, உள்ளூா் வேட்பாளா் ஆகியவை காா்த்திக்குக்கு சாதகமாக உள்ளன. ஆனால், கட்சிக்கு கட்டமைப்பு இல்லாதது, தோ்தல் அனுபவம் இல்லாதது பாதகமான அம்சம்.
6 முனைப் போட்டியில் வாக்குகள் பிரியும் நிலையில், அதிமுக கோட்டையாகக் கருதப்படும் இந்தத் தொகுதியைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் மகாலிங்கம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாா். எனினும், இந்தத் தொகுதியில் வெற்றி யாருக்கு என்பது மதில்மேல் பூனை என்பதே உண்மை.
தொடர்புடையது

பரமக்குடி - கடும் போட்டியை எதிா்கொள்ளும் திமுக, அதிமுக!

பெரியகுளம் (தனி): கரையேறும் போட்டியில் அமமுக, விசிக !
கோபிசெட்டிபாளையம்... கே.ஏ. செங்கோட்டையனின் வெற்றிப் பயணம் தொடருமா?

வேடசந்தூா்: திமுக, அதிமுக வேட்பாளா்களின் வெற்றி, தோல்வியைத் தீா்மானிக்கும் நாதக, தவெக!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

