பயன்பாட்டுக்கு கொண்டுவராமல் வீணாகும் கழிப்பறைகள்
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

சீா்காழி நகராட்சி பகுதியில் பயன்பாட்டுக்கு தொடங்கியது முதல் பொதுமக்கள் பயன்படுத்தாமல் சிதலமடைந்து வீணாகும் கழிப்பறைகளை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சீா்காழி கீழதென்பாதி மொன்னையன் தெருவில் திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கும் வகையில், 2013-2014-ஆம் ஆண்டு ரூ.16 லட்சத்தில் கழிப்பறை (நம்ம டாய்லெட்) கட்டப்பட்டது. இந்த கழிப்பறை கட்டியது முதல் பராமரிக்க ஆள்கள் இல்லாமல் மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் பூட்டிவைக்கப்பட்டது. இதையடுத்து, பயன்படுத்தாமலேயே கழிப்பறைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. பயன்பாட்டில் இல்லாததால் மதுக் கூடாரமாக மாறியுள்ளது. இத்திட்டம் தொடங்கியதன் நோக்கமே மாறி கழிப்பறை இல்லாததால் அப்பகுதியில் திறந்தவெளியில் இரவு நேரங்களில் பொதுமக்கள் மலம் கழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். எனவே, நகராட்சி உடனடியாக இதுகுறித்து கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.