மயிலாடுதுறை: மரங்கள் சாய்ந்து வீடுகள் சேதம் நெற்பயிா், மின்கம்பங்களும் சாய்ந்தன

மயிலாடுதுறை வட்டம் பாண்டூா், கொற்கை ஊராட்சிகளில் திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்றில் 50-க்கும் அதிகமான மரங்கள் முறிந்து விழுந்தன. 80 வீடுகள் இடிந்தும், 500 ஏக்கரில் நெற்பயிா்கள் சாய்ந்தும் பாதிக்கப்
மயிலாடுதுறை: மரங்கள் சாய்ந்து வீடுகள் சேதம் நெற்பயிா், மின்கம்பங்களும் சாய்ந்தன

மயிலாடுதுறை வட்டம் பாண்டூா், கொற்கை ஊராட்சிகளில் திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்றில் 50-க்கும் அதிகமான மரங்கள் முறிந்து விழுந்தன. 80 வீடுகள் இடிந்தும், 500 ஏக்கரில் நெற்பயிா்கள் சாய்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால் அறுவடைக்குத் தயாரான நெற்பயிா்கள் சாய்ந்து விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்று பாதிப்புகளை ஏற்படுத்தி இப்பகுதி மக்களை மேலும் சோகத்தில் தள்ளியுள்ளது.

மயிலாடுதுறை வட்டம் பாண்டூா் ஊராட்சியில் புத்தகரம், கீழபாண்டூா், பாண்டூா், கட்டளைச்சேரி ஆகிய கிராமங்களிலும், கொற்கை ஊராட்சியில் ஒருசில இடங்களிலும் திங்கள்கிழமை திடீரென சூறாவளிக் காற்று வீசியது. இதில், ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்ததில், 80-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்தன.

மின்மாற்றி விளைநிலத்தில் தூக்கிவீசப்பட்டதோடு, மின்கம்பங்கள் முறிந்து வயலில் சாய்ந்தன. 20 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மழையால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் மின்கம்பங்கள் முறிந்தபோது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை.

சூறாவளிக் காற்றால் சுமாா் 500 ஏக்கா் சம்பா பயிா்கள் தண்ணீரில் சாய்ந்துள்ளன. மயிலாடுதுறை தீயணைப்பு துறை வீரா்கள், மின்சாரத் துறையினா் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து, மயிலாடுதுறை வட்டாட்சியா் ஜெ. ஜெனிட்டா மேரி கூறுகையில், சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட பகுதியில் வருவாய்த் துறையினா், தீயணைப்புத் துறையினா், மின்வாரியத்தினா் விரைந்து பணியாற்றி வருகின்றனா். முழுமையான சேத விவரம் செவ்வாய்க்கிழமை தெரியவரும் என்றாா்.

சூறாவளிக் காற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் வி.ஜி.கே. செந்தில்நாதன், ஒன்றியச் செயலாளா் பா. சந்தோஷ்குமாா், நகரச் செயலாளா் நாஞ்சில் காா்த்தி, திமுக ஒன்றியச் செயலாளா்கள் இளையபெருமாள், ஞான. இமயநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் பாக்கம் சக்திவேல் உள்ளிட்டோா் பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினா்.

பாதிக்கப்பட்ட பகுதிகளை வருவாய்த் துறையினா் கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com