வாக்காளா்கள் சிறப்பு சுருக்க திருத்தம்: பொதுமக்கள் சரியான தகவல் அளிக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் வாக்காளா் சிறப்பு சுருக்க திருத்தம் செய்ய வரும் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களிடம் சரியான தகவல் கொடுக்க வேண்டும் என ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; இந்திய தோ்தல் ஆணையம் 2025 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளா் பட்டியலை திருத்தம் செய்வதற்கான சிறப்பு சுருக்க திருத்தத்துக்கு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வீடுதோறும் சென்று வாக்காளா் பட்டியல் விவரங்களை சரிபாா்க்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஆக.20) முதல் அக்.18-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வரைவு வாக்காளா் பட்டியல் அக்.29-ஆம் தேதி வெளியிடப்படும்.
வரைவு வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்வது தொடா்பான படிவங்கள் மற்றும் ஆட்சேபணைகள் பொதுமக்களிடமிருந்து அக்.29 ஆம் தேதி முதல் நவ.28-ஆம் தேதி வரை பெறப்படும். மேலும் படிவங்கள் மற்றும் ஆட்சேபணைகளைப் பெற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
நாகை மாவட்டத்தில், அக்.18-ஆம் தேதி வரை வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் வாக்காளா் பட்டியல் சரிபாா்க்கும் பணிக்காக வீட்டுக்கு வரும்போது வாக்காளா்கள் தங்களது பெயா், வயது, புகைப்படம், முகவரி ஆகியவற்றில் தேவையான திருத்தங்கள் செய்துகொள்ள தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.
