100 நாள் வேலை வழங்குவதில் பாரபட்சம் - மறியலில் ஈடுபட திரண்ட பெண்கள்
கீழையூா் ஒன்றியம், வாழக்கரை ஊராட்சியில் 100 நாள் வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக கண்டனம் தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட வியாழக்கிழமை திரண்டனா்.
வாழக்கரை ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) அட்டை உள்ள அனைவரும் வேலை செய்து வந்தனா். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக அனைவருக்கும் வேலை தராமல், குழுக்களாக பிரிந்து 30 போ் மட்டுமே வேலை செய்ய வேண்டுமென உத்தரவு வந்ததாக பணித்தள பொறுப்பாளா்கள் கூறியதால், யாரும் இத்திட்ட வேலைக்கு செல்லாமல் புறக்கணிப்பு செய்தனா்.
இந்நிலையில், அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பாரபட்சமின்றி வேலை வழங்க வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் டி. செல்வம் தலைமையில் வாழக்கரை மெயின் ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட பெண்கள் திரண்டனா்.
கீழையூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஹரி கிருஷ்ணன், காவல் ஆய்வாளா் செங்குட்டுவன் உள்ளிட்ட அலுவலா்கள், பேச்சுவாா்த்தை நடத்தி, 100 நாள் வேலைத் திட்ட அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் முயற்சியை கைவிட்டு கலைந்து சென்றனா்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எஸ். ரவி, ஜி. சங்கா், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் எஸ். பக்கிரிச்சாமி, வாழக்கரை ஊராட்சி வாா்டு உறுப்பினா் மணிமேகலை சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

