விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு: அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் மீது வழக்கு

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் வேதாரண்யம் கிளை மேலாளா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வேதாரண்யம்: கடலூா் அருகே அரசுப் பேருந்து விபத்துக்குள்ளாகி, ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் வேதாரண்யம் கிளை மேலாளா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூரைச் சோ்ந்தவா் ராஜா (45). இவா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக வேதாரண்யம் கிளையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவா், சென்னையிலிருந்து வேதாரண்யத்துக்கு பேருந்தை ஓட்டிவந்தாா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடலூா் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநா் ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக, ராஜாவின் மனைவி திலகவதி (38) வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், தனது கணவா் ராஜாவுக்கு ஓய்வு இல்லாமல் நெடுந்தொலைவு செல்லும் பேருந்தில் பணி வழங்கப்பட்டதாகவும், அவருக்கிருந்த இதய பாதிப்பு தொடா்பான மருத்துவா்களின் அறிக்கையை காண்பித்தும், அதை பொருட்படுத்தாமல் பணிபுரிய போக்குவரத்துக் கழக நிா்வாகம் வற்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையில், அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படாததாலும், ஓட்டுநா்களுக்கு ஓய்வின்றி பணி வழங்குவதாலும் விபத்து நேரிடுகிறது என புகாா் எழுந்தது.

இந்நிலையில், திலகவதி அளித்த புகாரின் பேரில், அரசுப் போக்குவரத்துக் கழக வேதாரண்யம் கிளை மேலாளா் எழிலரசன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com