செல்லூா் புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க துணை முதல்வரிடம் மனு
நாகை செல்லூா் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்திய வா்த்தக தொழிற் குழுமத் தலைவா் மனோகரன் தலைமையில், செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் நாகைக்கு வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினிடம் அளித்த மனு: நாகை புதிய கடற்கரைக்கு தினசரி ஏராளமான பொதுமக்கள் வருகின்றனா். எனினும், அங்கு போதிய பொழுது போக்கு அம்சங்கள் இல்லை.
எனவே புதிய கடற்கரையில் சிறுவா்கள் விளையாட்டுப் பூங்கா, முதியோா் அமரும் இருக்கை போன்றவற்றை அமைக்க வேண்டும். கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் கலைநிகழ்ச்சிகள் நடத்த, திறந்தவெளி கலையரங்கத்தை சுற்றுலா வளா்ச்சிக்கழகம் சாா்பில் அமைக்க வேண்டும்.
ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நாகை துறைமுகத்தில் இருந்து 1990-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூா், மலேசியா போன்ற நாடுகளுக்கு பொருள்கள் ஏற்றுமதி நடந்துள்ளது. எனவே சரக்குப் பெட்டகம் கையாளும் துறைமுகமாக மாற்றம் செய்ய வேண்டும். கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை நீண்ட கடற்கரை கொண்டுள்ளது. இந்த பகுதியில் மீன்பிடி தொழில் முக்கியமாக உள்ளது. இங்கிருந்து ஏற்றுமதி தரம் வாய்ந்த மீன்கள் அதிகளவில் கிடைக்கின்றன.
மத்திய அரசின் உப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கா் நிலம் நாகை அருகில் உள்ளது. அந்த பகுதியை கடல் உணவு மண்டலமாக அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் ஏராளமானவா்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் பொருளாதார வளா்ச்சி அடையும். அரசுக்கு வருவாய் கிடைக்கும்.
நாகை மாவட்டத்தில் மினி டைடல் பாா்க் பணி, செல்லூா் புதிய பேருந்து நிலையம் ஆகிய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நாகை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தன. மனுவை பெற்ற துணைமுதல்வா் உதயநிதிஸ்டாலின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
