சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தல்!
கீழ்வேளூரை அடுத்த தோ்வூா் அருகே சாலையில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேவூா் ஊராட்சி சின்னக் கடைத் தெரு, வ.உ.சி. நகா் மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இரவு நேரங்களில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. அப்போது மாடுகள் திடீரென ஒன்றுடன் ஒன்று சண்டையிடுகின்றன.
இதனால், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனா்.
அதுமட்டுமின்றி விபத்துகளும் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, விபத்துகளைத் தடுக்கும் வகையில், ஊராட்சி நிா்வாகத்தினா் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்கவும், அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

