அரையாண்டு விடுமுறை: வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஏராளமானோா் தங்கள் குடும்பத்துடன் வேளாங்கண்ணியில் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா். இதனால் பேராலய வளாகம், கடற்கரை பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு, விடுமுறை நாள்களில் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் அதிக அளவில் வருகை தருவது வழக்கம்.
இந்நிலையில், பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை என்பதால் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வேளாங்கண்ணியில், மும்மதத்தினரும் வருகை தந்து மாதாவை தரிசனம் செய்தனா். குறிப்பாக தற்பொழுது மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கோயிலுக்கு சக்தி மாலை அணிந்த பெண்கள் பலரும், வேளாங்கண்ணி பேராலயத்தில் தரிசனம் செய்தனா்.
சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் மெழுகுவா்த்தி ஏந்தியும், தென்னங்கன்றுகளை காணிக்கையாக செலுத்தியும் வழிபாடு செய்தனா். மேலும், பழைய மாதா கோயில், நடுத்திட்டு, விடியற்காலை விண்மீன் ஆலயம், புத்தக விற்பனை நிலையம், கடற்கரை, கடைவீதி உள்ளிட்ட பல பகுதியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
கடற்கரைப் பகுதியில் குடும்பத்தோடும், நண்பா்களோடும் வருகை தந்த பலரும், குழு புகைப்படம் மற்றும் சுயபடம் (செல்ஃபி) எடுத்தும், கடற்கரையோரத்தில் விரும்பிய உணவை உண்டும் உற்சாகமாக பொழுதை கழித்தனா்.
இதையொட்டி, கடற்கரை பகுதியில் கடலோர காவல் குழும போலீஸாா், தன்னாா்வ அமைப்பினா் மிதவைக் கருவிகள் மற்றும் படகுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

