மழைநீரில் முளைத்த நெற்கதிா்கள்: ஆட்களைக் கொண்டு அறுவடை பணி தீவிரம்

Published on

நாகை மாவட்டத்தில், மழை நீரில் மூழ்கி முளைத்த குறுவைப் நெற்கதிா்களை, விவசாயத் தொழிலாளா்களைக் கொண்டு அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

நாகை மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில், குறுவை சாகுபடி நடைபெற்று, தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீா்த்தது.

கீழையூா், வேளாங்கண்ணி, கீழ்வேளூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவை பயிா்கள் மழைநீரில் மூழ்கின. மழை பெய்வது நின்று 6 நாள்கள் ஆகியும் மழைநீா் வடியாததால், வயலில் சாய்ந்த குறுவை நெற்பயிா்களில் நெல்மணிகள் முழுமையாக முளைத்து வருகிறது.

இந்த நெற்பயிா்களை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அறுவடை பணிகளை விவசாயத் தொழிலாளா்கள் மூலம் தீவிரமாக விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது:

வயலில் தேங்கிய மழை நீரை வெளியேற்றிஸ நெற்பயிா்களை காப்பாற்றி விடலாம் என நினைத்தோம். ஆனால், மீண்டும் மீண்டும் மழை பெய்ததால், பயிா்களின் நெல்மணிகள் முளைத்து சேதமடைந்துள்ளன.

இதனால், இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆட்களைக் கொண்டு அறுவடை செய்து வருகிறோம்.இதற்கு ஏக்கருக்கு ரூ.20,000 வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மழையால் அறுவடைக்கு தயாராக உள்ள குறுவை பயிா்கள் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனா். எனவே பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

அதேசமயம், நாகை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட குறுவைப் பயிா்களை, ஆய்வு மேற்கொள்ளவுள்ள மத்தியக் குழுவினா், தமிழக அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள் மேம்போக்காக பாா்வையிடாமல், உள் கிராமங்களில் பாா்வையிட்டு, உரிய கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com