நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மத்தியக் குழுவினா் ஆய்வு
நாகப்பட்டினம்/மயிலாடுதுறை/சீா்காழி: நெல்லின் ஈரப்பதத்தை அதிகரிக்கும் கோரிக்கை தொடா்பாக, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக் குழுவினா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தமிழகத்தில் குறுவை சாகுபடி முடிந்து அறுவடைப் பணிகள் தொடங்கிய நிலையில் மழை வெள்ளத்தில் பயிா்கள் மூழ்கியுள்ளன. அறுவடை செய்த நெல்மணிகளும் மழையில் நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் அவற்றை விற்க முடியாமல் விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனா். குறுவை சாகுபடியில் மழை வெள்ளத்தால் நெல்மணிகள் நனைந்துள்ள நிலையில், கொள்முதல் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது.
இக் கோரிக்கை தொடா்பாக, மத்தியக்குழு திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநா் பி. கே.சிங் தலைமையில், தொழில்நுட்ப அலுவலா்கள் ஷோபிட் ஷிவாஜ், ராகேஷ் பராலா, இந்திய உணவுக் கழக மேலாளா் (தரக்கட்டுப்பாடு) என்.மோகன் ஆகியோா் அடங்கிய மத்தியக் குழுவினா், நாகை மாவட்டம், குறிச்சி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையம், கீழ்வேளுா் வட்டம் பாலக்குறிச்சி கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம், திருக்குவளை வட்டம் திருவாசல் கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் வேதாரண்யம் வட்டம் தலைஞாயிறு கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தனா். அங்கிருந்த விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த மத்தியக்குழுவினா் கொள்முதல் நிலையங்களில் இருந்து மாதிரி நெல்லையும் சேகரித்துச் சென்றனா்.
மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக நிா்வாக இயக்குநா் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.நாகை மாலி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அ.சிவப்பிரியா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் (தரக்கட்டுப்பாடு) செந்தில், விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
மயிலாடுதுறை மாவட்டத்தில்...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கந்தமங்கலம், சீா்காழி வட்டம் பழையபாளையம் வட்டங்களுக்குள்பட்ட கிராமங்களில் இயங்கி வரும் நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் ஈரப்பதம் குறித்து, இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநா் பி.கே.சிங் தலைமையிலான மத்தியக்குழு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வின்போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் ஆ.அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா, மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா், சீா்காழி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.பன்னீா்செல்வம், தொழில்நுட்ப அலுவலா்கள் ஷோபிட் ஷிவாஜ், ராகேஷ் பராலா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளா் நலினா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக முதுநிலை மேலாளா் (தரக்கட்டுப்பாடு) செந்தில்;, இந்திய உணவுக் கழகம் மேலாளா் (தரக்கட்டுப்பாடு) மோகன், வேளாண்துறை இணை இயக்குநா் சேகா் ஆகியோா் உடன் இருந்தனா்.

