கழிவு மீன்களின் துர்நாற்றத்தால் கேள்விக்குறியாகும் சுற்றுலா மேம்பாடு

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கழிவு மீன்களால் ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றளவுக்கு துர்நாற்றும்
Updated on
2 min read

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கழிவு மீன்களால் ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றளவுக்கு துர்நாற்றும் வீசுகிறது. இதனால், கடற்கரைக்கு செல்வோர் எண்ணிக்கை குறைந்து, சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
காரைக்காலில் அரசலாறு - முல்லையாறு இணையுமிடத்தில் மீன்பிடித் துறைமுகம் உள்ளது. மீனவர்கள் படகுகள் மூலம் கடலில் மீன் பிடித்து இங்கு கொண்டுவரும் மீன்களில் திருக்கை, வஞ்ஜிரம், கொடுவா, சீலா, சுறா, பாரை, கேரை, மயில் போன்ற வகை மீன்கள் மற்றும் இறால், நண்டு வகைகள் உள்ளிட்டவை ஏற்றுமதித் தரம் வாய்ந்ததாக இருக்கின்றன. இவற்றின் இறக்குமதி, ஏற்றுமதியால் துறைமுகத்தில் குறுகிய தூரத்தில் மட்டுமே கழிவுகளால் துர்நாற்றம் இருக்கும். 
ஆனால், மீனவர்கள் சிலர் கடலில் உள்ள சிறிய மீன்களில் கவளை, பொருவா, குத்துவா, சூடை, மத்தி, கெழங்கா போன்றவற்றை பிரத்யேக வலையைப் பயன்படுத்தி, குறிப்பாக மீன் குஞ்சுகள் வரை பிடிபடும் வகையிலான வலையில் பிடித்துவருகின்றனர். இவை  தீவனம், எண்ணெய் தயாரிப்புக்கு பயன்படுத்தக்கூடிய கழிவு மீன்களாக இருக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளாக இந்த வகை மீன்கள் காரைக்கால் துறைமுகத்துக்கு அதிக அளவில் பிடித்து வருவதாகக் கூறப்படுகிறது. 
இந்த வகை மீன்களை நன்கு காயவைத்து பொடியாக்கி, சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இந்த பொடி, தீவனம் மற்றும் எண்ணெய், மருந்து தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது.  அதிகம் லாபம் தரக்கூடியதாக இந்த வகை மீன்கள் இருக்கின்றன. இதனால், மீனவர்களிடையே இவ்வகை மீன் பிடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
தினமும் 50-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் கழிவு மீன்கள் கொண்டுவரப்படுகின்றன. இந்த வகை மீன்கள் தற்போது நாளொன்றுக்கு 20 டன் வரை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு பெட்டி 
(50 கிலோ) ரூ.300 விலையிலும், கொஞ்சம் தரமானவை ரூ.1,000 என்ற விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், தமிழகம் மட்டுமல்லாது கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் கழிவு மீனுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கழிவு மீன்கள்: காரைக்கால் துறைமுகத்தில் அதிகமாக கழிவுமீன்கள் கையாளப்படுவதால், துறைமுகம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் சுமார் 1.5 கி.மீட்டர் தொலைவுக்கு துர்நாற்றம் வீசியபடியே இருக்கிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதமாக ஆடி மாத காற்று வீசுவதால், துர்நாற்றம் வீசும் பகுதி அதிகரித்துள்ளது. மீன்பிடித் துறைமுகத்துக்கு 100 மீட்டர் தூரத்தில் பொதுமக்கள் திரளாக கூடும் கடற்கரை மணல் பரப்பு உள்ளது. சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளும் இந்த பகுதியில் நடைபெறுகின்றன.  குறிப்பாக, கடற்கரை சாலையில் பொதுப்பணித் துறை சார்பில் தங்கும் விடுதியும், கடற்கரையில் ஆக.1 முதல் பயன்பாட்டுக்கு வரக்கூடிய சுற்றுலாவினர் சொகுசு தங்கும் விடுதியும் அமைந்திருக்கிறது. கடற்கரைக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொழுதுபோக்கிற்காக வந்துசெல்கின்றனர்.
கடற்கரை சாலையில் டாப்ளர் ரேடார் நிலையம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், மீன்வளத் துறை உள்ளிட்டவையும், குடியிருப்புகளும் உள்ளன. இங்குள்ளவர்கள் துர்நாற்றத்தால் கடும் அவதிப்படுகின்றனர். காரைக்கால் கடற்கரை என்றாலே துர்நாற்றம் வீசக்கூடியது என்ற பெயர் பெறும் வகையில் உருவெடுத்துவிட்டது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கழிவு மீன் இறக்குமதி, ஏற்றுமதி முடிந்தவுடன் முறையாக துறைமுகம் தண்ணீரால் சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால், காற்று வீசும் திசையில் துர்நாற்றம் நீடிக்கிறது.  இது முற்றிலும் காரைக்கால் கடற்கரையை காணும் நோக்கில் சுற்றுலா வருவோரை வெகுவாக குறைத்துவருகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் ஏ.எம்.இஸ்மாயில், ஜெ.சிவகணேஷ் ஆகியோர் கூறியது: கடலில் மீன்வளம் இருந்தால் மட்டுமே மீனவர்களுக்கு எதிர்காலம். எனவே, மத்திய மாநில அரசுகள் தடை செய்த வலைகளை மீனவர்கள் பயன்படுத்துக் கூடாது. குறிப்பாக, துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கழிவுமீன்களை துறைமுகத்துக்கு லாப நோக்கில் கொண்டுவருவதை கட்டுப்படுத்த வேண்டும்.  கடற்கரை பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் வெளியூர்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி, உள்ளூர் மக்கள் கூட கடற்கரை செல்வதை தவிர்த்துவிடுவர். இதுகுறித்து காரைக்கால் மாவட்ட நிர்வாகம், மீனவ கிராமப் பஞ்சாயத்தார்களை அழைத்துப் பேசி நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தவேண்டும் என்றனர்.
கண்டுகொள்ளாத மீன்வளத்துறை: துறைமுகத்திலிருந்து இயக்கப்படும் அனைத்துப் படகுகளும் மீன்வளத் துறையில் பதிவு செய்திருக்கவேண்டும்.  ஆனால், பல படகுகளுக்கு பதிவு கிடையாது. தமிழகத்திலிருந்தும் படகுகள் நிறுத்தப்படுகின்றன. இதுகுறித்த தெளிவான பதிவுகள் இத்துறையில் வைத்திருப்பதில்லை. பொதுமக்களுக்கு இடையூறாக கடற்கரை சாலையை மீன் இறக்க, ஏற்ற பயன்படுத்துவது  கூடாது என்பதை இத்துறை கடுமையாக மீனவர்களுக்கு அறிவுறுத்துவதில்லை. காரைக்கால் கடற்கரையில் பிரதான பிரச்னையாக உருவெடுத்திருக்கும் துர்நாற்றம் குறித்து துறைமுகத்தில் ஆய்வு செய்து, மீனவர்களுக்கு அறிவுறுத்தல் கூறவும் இல்லை. மீனவர்களை அழைத்துப் பேசுவதும் இல்லை. ஒட்டுமொத்தத்தில் காரைக்கால் மீன்வளத்துறை செயலற்றத் துறையாக விளங்குவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
மக்கள் சந்திக்கும் பிரதான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு மாவட்ட நிர்வாகத்துக்கு உண்டு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com