காரைக்கால் கடற்கரை மேம்பாட்டுத் திட்டப் பணி தொடங்கப்படுமா ?

காரைக்காலில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான கடற்கரை மேம்பாட்டு 2-ஆவது கட்ட திட்டப் பணியை தொடங்க புதுச்சேரி அரசு கவனம்
Updated on
3 min read

காரைக்காலில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலான கடற்கரை மேம்பாட்டு 2-ஆவது கட்ட திட்டப் பணியை தொடங்க புதுச்சேரி அரசு கவனம் செலுத்துமா? என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தொலைதூர பிராந்தியமாக இருந்தாலும், மாஹே, யேனாம் பிராந்தியங்களை விட புதுச்சேரியிலிருந்து குறுகிய தூரத்தில், கடலோர பிராந்தியமாக காரைக்கால் திகழ்கிறது. உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் புதுச்சேரிக்கு வரும்போது, அந்த பிராந்தியத்தோடு பணிகளை நிறைவு செய்து திரும்புகின்றனர். மாநிலத்தின் அடுத்த பிராந்தியத்தில் சுற்றுலா மேம்பாடு இல்லாததே இதற்கு காரணமாகும். காரைக்காலையொட்டிய தமிழகப் பகுதியான நாகூர், வேளாங்கண்ணிக்கு செல்வோர் பிரெஞ்சு கலாசார பின்னணி கொண்ட காரைக்காலையும், இப்பிராந்திய இயற்கையான அமைப்புடன் கூடிய கடற்கரை அழகை ரசிக்கவும் வந்து செல்கின்றனர். தவிர, காரைக்கால் அம்மையார் கோயில், திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேசுவரர் கோயிலுக்குச் செல்வோர் கடற்கரைக்கும் வந்து செல்கின்றனர்.
காரைக்காலில் சுற்றுலாவினரை ஈர்க்கும் வகையில் புதுச்சேரியை ஒப்பிடும்போது 10 சதவீதம்கூட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள், மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள்இல்லை. என்ஐடி, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை, புதுவை பல்கலைக்கழக பிராந்திய வளாகம், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தனியார் கப்பல் துறைமுகம், பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் உள்ளதால் காரைக்காலை உயர் கல்விக் கேந்திரமாக திகழ்வதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.
காரைக்கால் ஆன்மிகச் சுற்றுலாத் தலம் என்று பெயர் பெற்றுள்ளதால், கடற்கரை மட்டுமே சுற்றுலாவினரை மகிழ்விக்கக் கூடியதாக உள்ளது. இங்கு நாள்தோறும் மற்றும் வார விடுமுறை நாள், பண்டிகை காலங்களில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வதால் காரைக்கால் நகரில் போக்குவரத்து வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வியாபார மையங்களில் வருவாய் கிடைப்பது உறுதியான ஒன்று. காரைக்காலில் சுற்றுலாத் திட்டங்களை மேம்படுத்த வேண்டுமெனில் அத்துறை செவ்வனே செயலாற்ற வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக காரைக்காலில் இத்துறை உதவி இயக்குநர் பதவி காலியாகவே உள்ளதால், திட்டம் வகுப்பது,  மாநில அரசை அணுகுவது, திட்டத்தின் மூலம் மத்திய நிதியை பெறுவது போன்ற நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் உள்ளது.
காரைக்கால் கடற்கரை சுற்று வட்டாரம் இயற்கையாகவே அழகாக அமைந்துவிட்டதால், இதை மேம்படுத்த திட்டம் வகுத்து முதல் கட்ட திட்டப் பணி ஏறக்குறைய நிறைவேற்றப்பட்டுவிட்டது. கடற்கரையில் ரூ. 3.5 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டு, அதை யாரும் பயன்படுத்த வராததால் நிலையில், வணிக வளாகத்தை மேலும் ரூ. 3.5 கோடி செலவில் தங்கும் விடுதியாக புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை அதுவும் பயன்பாட்டுக்கு  வரவில்லை.
கடற்கரையோரத்தில் குறுக்குச் சாலைகள், நடைமேடை, குழந்தைகள் பூங்கா, கடலோரத்தில் விளக்குகள் இவைகள் கடற்கரை மேம்பாட்டுத் திட்டத்தின் முதல்கட்ட திட்டப்பணி என்று கூறப்படுகிறது. இகோ பீச் என்ற  திட்டத்தில் கடற்கரை மேம்பாட்டு 2-ஆவது கட்டத் திட்டப் பணி கடந்த 2, 3 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும். இதுபோன்ற திட்டங்களுக்கு மத்திய சுற்றுலாத்துறை நிதியுதவி செய்கிறது. திட்டங்கள் வகுக்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் இந்தந்த திட்டங்களுக்கு இவ்வளவு நிதி என பெற முடியும். காரைக்கால் மாவட்ட ஆட்சியராக வசந்தகுமார் இருந்தபோது, இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. அதன்பிறகு திட்டம் குறித்து எந்த முன்னேற்றமும் தொடரவில்லை.
இந்த அலையாத்திக் காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைமேடை அருகே குழந்தைகள் பயணிக்கும் சுற்றுலா ரயில் இயக்கலாம். நடைமேடையிலிருந்து அலையாத்திக் காடு மையத்தில் மரப்பாலம் அமைத்து, குடில் அமைப்புடன் ரெஸ்டாரண்ட்கள், நீர்நிலையின் மத்தியில் உடற்பயிற்சிக் கூடம் அமைக்கலாம், அலையாத்திக்காடு தண்ணீரில் பெடல் முறையில் மிதித்து செல்லும் படகுகள் இயக்கலாம்,  கடற்கரையோரத்தில் கட்டப்பட்ட தங்கும் விடுதி அருகே பரந்த மணல் பரப்பு உள்ள இடத்தில், கேரளம், கோவா மாநில கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் குடில்கள், செயற்கை அரண் அமைக்கலாம், இவை அமைவதற்கு ஏற்ப திட்டம் தீட்டப்பட்டு, ஏறக்குறைய ரூ. 50 கோடி வரை செலவாகும் என்பது முந்தைய மதிப்பீடு. இதற்கான உரிய திட்டமிடலுடன், மத்திய அரசை அணுகும்போது, படிப்படியாக நிதி அனுமதி கிடைக்கும் என்பது அரசு அலுவலர் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்த முயற்சியை  யாரும் எடுக்காததால், காரைக்கால் கடற்கரையில் 2 -ஆவது கட்ட மேம்பாட்டுப் பணி என்பது முடங்கியிருக்கிறது.
இத்திட்டத்தின்கீழ் கடற்கரையையொட்டி அரசலாற்றில் உள்ள தற்போதைய படகு குழாமை மேம்படுத்தி, கூடுதல் படகுகள் இயக்கலாம், அரசலாற்றுப் பாலம் அருகே கடற்கரை சாலை முகப்பில் சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான பழைமையான கட்டடத்தை இடித்துவிட்டு, பல்நோக்கு சிறப்பம்சங்கள் கொண்ட திட்டங்களை உள்ளடக்கி பல்நோக்குக் கூடம் அமைக்கலாம், கடற்கரையில் உள்ள புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான சீகல்ஸ் உணவகத்துக்கு அனைவரும் வரும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கடற்கரையில் கூடுதலாக ஒரு குழந்தைகள் பூங்காவை அமைக்க வேண்டும்,
காரைக்கால் மாவட்டத்தின் எல்லை பூவம் மற்றும் வாஞ்சூரில், கடற்கரையின் சிறப்பம்சங்கள் குறித்து விரிவான விளக்கப் படங்களுடன், திரை மற்றும் வழிகாட்டுப் பதாகைகள்அமைக்கலாம், காரைக்கால் கடற்கரைக்கு மாற்றாக கீழகாசாக்குடிமேடு பகுதியில் சுற்றுலாவினருக்காக மேம்படுத்தப்பட்ட அமைப்புகள் உருகுலைந்து பயனற்றுப் போயுள்ளது. அரசலாற்றங்கறையில் சுற்றுலாவினர் பாதிக்காதிருக்க, ஆற்றின் தென்கரையில் படகுகளை நிறுத்த ரூ. 15 லட்சம் செலவில் கருங்கல் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டும் பயனில்லை. இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருநள்ளாறு அருகேயுள்ள நல்லம்பல் ஏரியை சுற்றுலாவினர் பயன்படுத்தும் வகையில் ரூ. 3 கோடியில் மேம்படுத்தப்பட்டது. இப்பகுதிக்கு மக்கள் செல்லவே அச்சப்படும் நிலையால், திட்ட நோக்கம் முழுமையாக பொய்த்துவிட்டது. இதுபோல அரசு நிதியை, தொலைநோக்குத் திட்டமின்றி விழலுக்கு  இரைத்த நீர் போல செலவிடாமல், காரைக்கால் கடற்கரையை மட்டுமே மேம்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில், படிப்படியாக திட்டப் பணிகளை செய்தால், காரைக்காலுக்கு சுற்றுலாவினர் வருகை அதிகரிக்கும், இதன்மூலம் வியாபாரம் பெருகும், அரசுக்கு வருவாய் கிடைக்கும். புதுவைக்கு பெருமை சேரும்.
காரைக்காலில் தனியார் விமான தளம் அமைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு ஒப்புதல் பெற்று, நில ஆர்ஜிதம் செய்து பணிகள் ஏறக்குறைய முடிக்கப்பட்டுள்ள நிலையில், திட்டம் தொடங்காமல் முடங்கியிருக்கிறது. தனியார் நிறுவனத்தினரிடம் பேசி, திட்டப் பணியை செய்ய அரசின் ஆதரவுகளை அளித்து, விமான சேவையை தொடங்க வேண்டும். இதன்மூலம் புதுதில்லி உள்ளிட்ட பெருநகரங்களுக்கு விமானம் இயக்கும்போது, காரைக்காலுக்கு பெருமைகள் குவியும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
குறிப்பாக, மத்திய தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட, சுற்றுலாத் திட்ட ஆர்வலர் ஒருவரை காரைக்கால் சுற்றுலாத் துறைக்கு உதவி இயக்குநராக நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மக்களின் எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறுவது சாத்தியம்.
இதுகுறித்து சமூக ஆர்வலரும், காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் செயலருமான ஜெ. சிவகணேஷ் கூறியது: காரைக்கால் பிராந்தியம் சுற்றுலா மேம்பாட்டில் பின்தங்கியுள்ளது. கடற்கரை சாலை, நடைமேடைகள் சரியாக பராமரிக்கப்படாததால், சுற்றுலாவினரை முகம் சுளிக்கச் செய்கிறது. மத்தியிலிருந்து நிதியாதாரத்தை சுற்றுலாத் திட்டங்களுக்குப் பெற துணை நிலை ஆளுநர் முயற்சிக்க வேண்டும். சுற்றுலாத் திட்டங்களை புதுச்சேரி அரசு மேம்படுத்துவதும், கார்னிவல் போன்ற கலாசார பெருமைகளை விளக்கும் பல மாநில கலைஞர்களைக் கொண்டு அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்தி காரைக்காலை சுற்றுலா பிராந்தியம் என்ற பெயரை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை உதவி இயக்குநர் (ஓய்வு) தட்சணாமூர்த்தி கூறியது: 2-ஆவது கட்ட திட்டப் பணிகளுக்கான உரிய திட்டமிடலுடன், மத்திய சுற்றுலாத்துறையை அணுகினால், திட்ட உதவிகள் கிடைக்கும். திட்டப் பணிகளை படிப்படியாக மேற்கொண்டால் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் காரைக்கால் இகோ பீச் திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்றார். காரைக்காலைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இதுபோன்ற திட்டத்தின் மூலம் காரைக்காலை மேம்படுத்த முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்பது பெரும்பான்மையினர் எதிர்பார்ப்பு.


கடற்கரை அருகே நீர்நிலை, அலையாத்திக்காடு வளர்ப்புடன் சுமார் 40  ஏக்கரில் நிலப்பரப்பு அமைந்திருக்கிறது. இதில், கோடியக்கரைக்குச் செல்லும் பருவ கால வெளிநாட்டுப் பறவைகள் வந்து 
செல்கின்றன. இதை மேம்படுத்தி, சுற்றுலாவினர் வருவதற்கேற்ப மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்டவையே இகோ பீச் 2-ஆவது திட்டமாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com