ஓராண்டு நிறைவு: ஜிஎஸ்டி குறித்த புரிதல் பள்ளிப்பாடத்தில் இடம்பெற வேண்டும்

ஜிஎஸ்டி குறித்து பள்ளி அளவிலான பாடத்திட்டத்திலேயே புரிதலை ஏற்படுத்த வேண்டும் என ஒரு தரப்பும், ஜிஎஸ்டியில் கூடுதல் சலுகையை அரசு தர வேண்டும் என மற்றொரு தரப்பும் வலியுறுத்தியுள்ளது. 
Updated on
2 min read

ஜிஎஸ்டி குறித்து பள்ளி அளவிலான பாடத்திட்டத்திலேயே புரிதலை ஏற்படுத்த வேண்டும் என ஒரு தரப்பும், ஜிஎஸ்டியில் கூடுதல் சலுகையை அரசு தர வேண்டும் என மற்றொரு தரப்பும் வலியுறுத்தியுள்ளது. 
நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி என்கிற ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் ஓராண்டு நிறைவுபெற்றது. இந்த நாளை ஜிஎஸ்டி நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.
ஜிஎஸ்டி அமலாக்கம் வந்த பிறகு வணிகர்களும், பொதுமக்களும் பெருவாரியாக இதைச் சாதகமாக கருதவில்லை. அரசு தரப்பு மட்டும் முந்தைய வரி முறையைக் காட்டிலும் தற்போது வருவாய் அதிகமாக வருவதாக தெரிவிக்கிறது. வரி அமலாக்கத்தில் பொதுமக்களின் நலனையே முக்கியமாக பார்க்க வேண்டியுள்ளது. இந்த புதிய சட்டத்தில் மேலும் பல சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது வணிகர்கள், பொதுமக்கள் தரப்பு வாதமாக இருந்து வருகிறது.
இதுகுறித்து காரைக்கால் பகுதியைச் மூத்த கணக்குத் தணிக்கையாளர் 
பி. கணபதி சுப்ரமணியன் ஞாயிற்றுக்கிழமை கூறியது : 
பல நாடுகளில் ஒற்றை வரி முறை அமலில் உள்ளது. இந்தியாவில் மாநில ஜிஎஸ்டி, மத்திய ஜிஎஸ்டி போன்ற வகைகள் உள்ளன. ஒட்டுமொத்த அளவில் கடந்த ஓராண்டில் அமல்படுத்திய இந்த சட்டம் பின்னர்  சீர்திருத்தம் செய்தவற்றை ஆராயும்போது, சரியான பாதையில் செல்வதாகவே அறிய முடிகிறது. ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின்னர் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடுத்துவரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேலும் பல சலுகையை அளிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
வணிகர்களில் பலரும் கணக்கு தாக்கல் முறையை முறையாக புரிந்து கொள்ளவில்லை. புதிதாக ஜிஎஸ்டியில் ஒரு படிவம் அமல்படுத்தப்படும் போது, அதனைக் குறைந்தது ஓராண்டுக்கு சோதனை முறையில் பரிசோதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வணிகர்கள் ஜிஎஸ்டியால் ஆதாயம் அடையும்போது, அதனை மக்களுக்குத் திருப்பித் தர வேண்டும். உதாரணத்துக்கு வரி குறைப்பின்போது அதன் சலுகை மக்களுக்கு கிடைக்க வேண்டும். இதனை செய்தால் மக்கள் பயனடைவார்கள். ஜிஎஸ்டி மீது மக்களுக்கும் நம்பிக்கை வரும். இதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
புதுச்சேரி ஒரு சிறிய மாநிலம். ஜிஎஸ்டியால் அரசுக்கான சாதகம், பாதகம் குறித்து பொருளாதார நிபுணர்களைக் கலந்துபேசி, வெள்ளை அறிக்கையை அரசு  வெளியிடவேண்டும். ஜிஎஸ்டி குறித்து தவறான புரிதல் சட்டத்தில் இல்லை. மாறாக அமலாக்கத்தில் உள்ளது. எனவே மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் புரிதலை எளிமைப்படுத்த வேண்டும். அதை செய்தாலே மக்கள் ஏற்கத் தொடங்கிவிடுவர். பள்ளியின் மேல்நிலை வகுப்பிலேயே ஜிஎஸ்டி குறித்த புரிதலை ஏற்படுத்தும் பாடத்தைக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் பெரிய ஜனநாயக நாட்டில், ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டது மக்களுக்கு பயனுள்ளதாக உருவெடுக்கும் என்றார் அவர்.
வரிச்சலுகை வேண்டும் : காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் செயலர் ஜெ. சிவகணேஷ் கூறியது :  கடந்த ஓராண்டில் ஜிஎஸ்டியால் வணிகர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்கப்பூரில் ஒற்றை வரி முறையாக 7 சதவீதம் உள்ளது. 
இந்தியாவில் 1, 5, 12, 18, 28 என்ற வீதத்தில் வரி விதிக்கப்படுகிறது. 12 சதவீதத்துக்குள் வரி வீதம் அமைய வேண்டும். இ-வே பில் முறையில் மாநிலங்களுக்கிடையே வேறுபாடு நிலவுவதைக் களைய வேண்டும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பொருள்கள் விற்பனை செய்தால், இ-வே பில் தர வேண்டும் என்ற உச்சவரம்பை, ரூ.1 லட்சமாக மகாராஷ்டிர அரசு கொண்டு 
வந்துள்ளது.
அதுபோல புதுச்சேரி மாநிலமும் மத்திய அரசின் அனுமதி பெற்று செய்ய வேண்டும். வணிகர்கள் வரி செலுத்தும் காலத்தைக் கடக்கும்போது, அபராதம் விதிக்கும் முறையை கைவிட வேண்டும். காரைக்காலை பொருத்தவரை இணையதள வசதியை மேம்படுத்த வேண்டும்.  எல்லா வணிகர்களுக்கும் இணைய வசதி முறையாக இருக்கவில்லை. 
தமிழகம் போன்ற பெரிய மாநிலங்களில் பொருள்கள் உற்பத்தியாகின்றன. ஆனால் புதுச்சேரியில் உற்பத்தி கிடையாது. வாங்கி, விற்கும் மாநிலமாகவே உள்ளது. எனவே வரியைக் குறைப்பதோடு, வரி தாக்கல் செய்யும் முறையையும் எளிமைப்படுத்த வேண்டும்.
குறிப்பாக, மரம் விற்பனைக்கு 8 சதவீதமாக இருந்த வரி, தற்போது 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது மக்களுக்கு சுமை என்பதை அரசு உணர வேண்டும். சுற்றுலா சம்பந்தப்பட்டவற்றுக்கு வரிச் சலுகை தரப்பட வேண்டும். அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கடந்த ஓராண்டில் மக்கள் அடைந்த துன்பங்களை தீவிரமாக ஆராய வேண்டும். 
நிபுணர்கள் தெரிவித்த கருத்துகளைக் கொண்டு மத்திய அரசு ஜிஎஸ்டி அமலாக்கம் வெற்றி பெற்றதாகவோ, மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டதாகவோ கருதுவது தவறான செயலாக அமையும். ஒட்டுமொத்தத்தில், ஜிஎஸ்டி சட்டம் வணிகர்களுக்கும், நுகர்வோருக்கும் இந்தியாவைப் பொருத்தவரை சரியான வகையில் இல்லை என்றே கூறலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com