திருநள்ளாறு நளன் குளக்கரை ரூ.8 கோடியிலான திட்டப்பணிகள் பயன்பாட்டுக்கு வருமா?

திருநள்ளாறு நளன் குளக்கரை பகுதியில் ரூ. 8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு வளாகங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா ? வரப்படாதா என்று பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 
Updated on
2 min read

திருநள்ளாறு நளன் குளக்கரை பகுதியில் ரூ. 8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு வளாகங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படுமா ? வரப்படாதா என்று பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 
திருநள்ளாறு கோயில் நகர மேம்பாட்டுத் திட்டத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டு இறுதியில் நளன் தீர்த்தக் குளம் பகுதியில் ரூ.3.96 கோடியில் வணிக வளாகம், பொருள்கள் பாதுகாப்பகம், கழிப்பறை, உடைமாற்றும் அறை உள்ளிட்ட வளாகங்கள் கட்டப்பட்டன. இதில், கழிப்பறை, உடை மாற்றும் அறைகள் மட்டுமே பயன்பாட்டுக்கு வந்தன. கடைகள் உள்ளிட்ட மற்ற வசதிகள் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. மேலும், நளன் குளத்தின் கிழக்குப் புறத்தில் சுமார் 20 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட கூடுதலாக 15 கடைகள் கொண்ட வளாகம், 2 ரெஸ்டாரண்ட், அருங்காட்சியகம், தகவல் மையம் ஆகியவை கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது. ஆனால், இதுவரை மேற்குறிப்பிட்ட வளாகங்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. 
ஹட்கோ நிதியுதவியில், திருநள்ளாறு கோயில் நகர மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் முடிக்கப்பட்ட இவை முற்றிலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வசதியை நோக்கமாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், கடைகள் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிய நிலையிலேயே உள்ளதால், நளன் குளத்தில் நீராடும் பக்தர்கள் வாங்கும் பொருள்களுக்கான கடைகளை, நடைபாதையிலேயே வைத்து சிறு வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற நிலை திரளான பக்தர்கள் வரும் சமயங்களில் கடும் நெரிசலை ஏற்படுத்துகிறது.  குறிப்பாக, கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக நளன் தீர்த்தக் குளத்திற்கு பக்தர்கள் செல்கின்றனர். இவர்கள் வரிசை வளாகம் எங்கு உள்ளது, கட்டண தரிசன வழி எங்கு உள்ளது, பிற தீர்த்தங்கள் எங்கு இருக்கின்றன, வழிபாடு செய்யும் முறை போன்றவற்றை தெரிந்துகொள்ள தகவல்கள் தனியாரிடம் தெரிந்துகொள்ள நேரிடுகிறது. இதுகுறித்து முழு விவரங்களை தெரிவிக்கும் நோக்கில் தகவல் மையம் மேற்கண்ட வளாகத்தில் அமைக்கப்பட்டும், இது செயல்பாட்டுக்கு வராததால் திட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை. நளன் குளக்கரைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட இத்திட்டப் பணிகள் என்ன காரணத்தினாலோ பயன்பாட்டுக்கு வராமல் உள்ளன.
இக்கட்டுமானங்களை, சுற்றுலாத் துறை, கோயில் நிர்வாகம், கோயில் நகரமேம்பாட்டுத் துறை என யார் நிர்வகிப்பது என்ற முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழா காலத்துக்கு முன்பே இவை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கவேண்டும். ஆனால், இதுகுறித்து மாவட்ட நிர்வாகமோ, கோயில் நிர்வாகமோ, தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரோ முழுகவனம் செலுத்தப்படாததால் குறித்த காலத்தில் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதுகுறித்து கோயில் நகர மேம்பாட்டுத் திட்ட செயற்பொறியாளர் மதிவாணன் கூறியது: கட்டுமானங்கள் நிறைவடைந்துவிட்டன. இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அல்லது புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் என யார் நிர்வகிப்பது என்ற பரிசீலனையில் அரசு நிர்வாகம் இருக்கிறது. இதுவிரைவில் முடிக்குவந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றார்.
எனவே, சம்பந்தப்பட்ட தொகுதியை சேர்ந்த வேளாண் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியர், கோயில் நிர்வாக அலுவலர், சுற்றுலாத் துறையினர் இதுகுறித்து தீவிர ஆலோசனை நடத்தி, ஒரு மாத காலத்திற்குள் பக்தர்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com