கேந்திரிய வித்யாலயாவில் நிறைவடையாத ஆய்வுக்கூடம் அமைப்புப் பணி: பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் தலையிட வலியுறுத்தல்

காரைக்கால் கேந்திரிய வித்யாலயத்தில் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான ஆய்வுக் கூடம் அமைக்கும் பணி கடந்த 8 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தும் இதுவரை நிறைவுபெறவில்லை. மாணவர்கள்
Updated on
3 min read

காரைக்கால் கேந்திரிய வித்யாலயத்தில் பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கான ஆய்வுக் கூடம் அமைக்கும் பணி கடந்த 8 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்தும் இதுவரை நிறைவுபெறவில்லை. மாணவர்கள் ஆய்வகக் கல்வி கற்க முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் தலையிட்டால் மட்டுமே மாணவர்கள் நலன் காக்கப்படும் என பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் தற்காலிக இடத்தில் மத்திய அரசின் கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா இயங்கி வருகிறது. 1 முதல் 10 -ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவியர் பயின்று வந்தனர்.
கடந்த 2017-18 -ஆம் கல்வியாண்டில் இந்த பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு தொடங்க வேண்டும் என்பது மாணவர்கள், பெற்றோர்களின் வலியுறுத்தலாக இருந்தது. பள்ளி தற்காலிக இடத்தில் இயங்குவதோடு மட்டுமல்லாது, கூடுதலான வகுப்பறைகள் தேவை, ஆய்வக வசதியை மாவட்ட நிர்வாகம் செய்து தந்தால் அனுமதி தரப்படும் என கேந்திரிய வித்யாலய தலைமையகம் கூறியது. குறித்த காலத்துக்குள் இந்த கட்டமைப்புகளை உருவாக்கித் தருவதாக மாவட்ட நிர்வாகம் அளித்த உறுதியின்பேரில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், தற்காலிக இடத்தில் பிளஸ் 1 வகுப்பு தொடங்குவதற்கு அனுமதி வழங்கியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 -ஆம் தேதி முதல் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் தொடங்கியது.
மாணவர்களுக்கு ஆய்வுக் கூடம் அவசியமாகியிருக்கும் நிலையில், கடந்த 3 மாதங்களாக ஆய்வுக் கூடத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் உரிய நிதி ஒதுக்க முடியவில்லை. இதனால் மாணவர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது.
மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் அனுமதியின்பேரில், ஆய்வுக் கூடத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணியை பொதுப் பணித் துறை நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால், குறித்த காலத்துக்குள் கட்டுமானத்தை முடிக்கவில்லை. கடந்த ஓராண்டாக பிளஸ் 1 பயின்ற மாணவர்கள் ஆய்வக வசதி இல்லாமலேயே படித்துவிட்டு பிளஸ் 2 வகுப்புக்கு முன்னேறியுள்ளனர். கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ஆய்வுக்கூடம் அமைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
ஒப்பந்ததாரருக்கு உரிய நிதியை தராததால், பணிகள் முடக்கப்பட்டுள்ளன.
வகுப்பறைகள், ஆய்வுக்கூட மொத்த மதிப்பீட்டில் குறைந்த நிதியை மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது. பெரும் தொகை அனுமதிக்க வேண்டியுள்ளதால், எஞ்சிய பணியை செய்ய முடியவில்லை என ஒப்பந்ததாரர் கூறுகிறாராம்.
கேந்திரிய பள்ளி நிர்வாகமும், பெற்றோர்கள் தரப்பும் மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து பல கட்டங்களாகப் பேசியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. ஒப்பந்ததாரருக்கு தர வேண்டிய தொகையில் குறிப்பிட்ட அளவு தரப்பட்டால் மட்டுமே ஆய்வுக்கூடம் முழுமை நிலைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் புதுச்சேரி பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர், மாணவர்கள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தலையிட்டு, உரிய நிதியை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து கேந்திரிய வித்யாலயத்தின் முதல்வர் வலவனிடம் திங்கள்கிழமை கேட்டபோது, உரிய நிதியை மாவட்ட நிர்வாகம் ஒப்பந்ததாரருக்கு தரவேண்டியுள்ளது. இதனால் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து பேசியுள்ளோம். விரைவில் ஆய்வகம் தயார் நிலைக்கு வந்துவிடும் என்றார்.
மாணவர்கள் வலியுறுத்தல் : கடந்த 2017-18 -ஆம் ஆண்டில் கேந்திரிய வித்யாலயத்தில் 35 மாணவர்கள் 10 -ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியுள்ளனர். பெரும்பான்மையினர் இதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு தொடர விரும்புகின்றனர். இதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதி மிகவும் அவசியம். காரைக்காலில் பிற சி.பி.எஸ்.இ. தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கான இடம் போதிய அளவில் இல்லை. கட்டணம் வெகுவாக அதிகரித்துள்ளது. இது தங்களுக்கு சாத்தியமில்லை. கேந்திரிய வித்யாலயத்தில் வசதியை மாவட்ட நிர்வாகம் அடுத்த ஒரு மாத காலத்துக்குள் செய்து தந்தால் மட்டுமே உயர் கல்விக்கான தங்களது இலக்கை அடைய பயணிக்கும் பாதை எளிமையாக இருக்கும் என மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெற்றோர்கள் வலியுறுத்தல் : கேந்திரிய வித்யாலயத்தின் தற்காலிக இடத்தில் ஆய்வகப் பணியை முடிக்க பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நிரந்தர கட்டடம் கட்ட மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ரூ. 20 கோடி முதல் 22 கோடி வரை தருவதற்கு தயாராக இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக பள்ளி நிர்வாகம் ஏற்கெனவே தெரிவித்தது. மாவட்ட ஆட்சியர் சிறப்பு கவனம் செலுத்தி பள்ளிக் கட்டடம் கட்ட காரைக்கால் பகுதியில் தகுதியான நிலம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 8 ஆண்டுகளாக இந்த பள்ளி காரைக்காலில் தற்காலிக இடத்திலேயே செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனமான என்.ஐ.டி., ஜிப்மர் மருத்துவக் கல்லூரி போன்றவற்றுக்கு உரிய நிலத்தை காலத்தோடு அளித்த புதுச்சேரி அரசு, பள்ளி மாணவர்களுக்காக உரிய இடத்தை தேர்வு செய்து வழங்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது.
முரண்பட்ட அரசுகளால் பிரச்னை தீர்க்கப்படவில்லையா ? : காரைக்கால் கேந்திரிய வித்யாலயம் அமைத்தபோது மத்தியில் மன்மோகன்சிங் அரசும், மாநிலத்தில் என்.ஆர். காங்கிரஸ் அரசும் இருந்தது. அப்போதைய மத்திய இணை அமைச்சர் வி. நாராயணசாமி, காரைக்காலில் கேந்திரிய வித்யாலயம் கொண்டு வந்தது தம்மால்தான் என கூறிவந்தது மாநில ஆட்சியாளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் பள்ளிக்கான போதிய நிலத்தை மாநில அரசு ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தியது. இப்போது மத்தியில் பாஜக அரசும், மாநிலத்தில் காங்கிரஸ் அரசும் இருக்கிறது. கொள்கை முரண்பாடுள்ள அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் இருப்பதாலேயே காரைக்காலில் கேந்திரிய வித்யாலயாவுக்கு மட்டும் நிரந்தர இடமோ, தற்காலிக இடத்தில் சீர்படுத்தும் நடவடிக்கையோ மாநில அரசு செய்யாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். விதிவிலக்காக காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கும், என்.ஐ.டி.க்கும், கடலோரக் காவல்படைக்கும் மாநில அரசு தாராளமாக நிலத்தை ஒதுக்கி அளித்ததையும் அவர்கள் கூறுகின்றனர். கேந்திரிய வித்யாலயம் சிறார்கள் சம்பந்தப்பட்டது என்பதால் மாநில அரசே சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் தற்போது புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி கவனம் செலுத்தினால் எளிதில் பிரச்னைகள் தீரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com