மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஆட்சியரகப் பகுதியில் 3 மாதமாக தடை உத்தரவு: அரசின் இயலாமையைக் காட்டுகிறது: போராட்டக் குழு

காரைக்கால் ஆட்சியரகப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக 144 தடை உத்தரவு நீடிக்கச் செய்திருப்பது அரசின் இயலாமையைக் காட்டுவதாகப் போராட்டக்குழு கூறியுள்ளது.

Updated On :3 செப்டம்பர் 2018, 12:51 am

காரைக்கால் ஆட்சியரகப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக 144 தடை உத்தரவு நீடிக்கச் செய்திருப்பது அரசின் இயலாமையைக் காட்டுவதாகப் போராட்டக்குழு கூறியுள்ளது.
காரைக்கால் போராட்டக் குழு அமைப்பாளர் வழக்குரைஞர் எஸ்.பி. செல்வசண்முகம் ஞாயிற்றுக்கிழமை கூறியது  :
புதுச்சேரியில் மக்கள் மாற்றத்தை விரும்பி காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளை கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஆதரித்தனர். நாராயணசாமி தலைமையில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் காங்கிரஸ் கூட்டணி அரசு, காரைக்கால் பிராந்தியத்தின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தவே இல்லை. எந்த மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்களோ, அவர்கள் தற்போது வேதனைப்படும் நிலை ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டுவிட்டது.
காரைக்காலில் மருத்துவ வசதி, சாலைகள் மேம்பாடு, தொழிற்சாலைகள் அமைப்பு, வேலைவாய்ப்புகள் உருவாக்கம், சுற்றுலா மேம்பாடு, அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் மேம்படுதல், அரசுத்துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்புதல், லஞ்சம் மற்றும் முறைகேடுகளை அரசுத்துறைகளில் கண்காணித்து நடவடிக்கை எடுத்தல், அரசுத்துறைகளில் மக்கள் எளிதாக உதவிகளை பெறமுடியாதது, விவசாய மேம்பாடு போன்ற எதிலும் நாராயணசாமி அரசு சிறிதுகூட கவனம் செலுத்தவே இல்லை.
ஆளுநரும், முதல்வரும், அமைச்சர்களும் வெறும் ஆய்வுகள் என்ற போக்கிலேயே காலத்தை கடத்தி வருகிறார்கள். எந்தவொரு திட்டத்துக்கும் நிதி ஒதுக்கீடு இல்லை.
மாநில அமைச்சர்களில் ஒருவர் காரைக்காலைச் சேர்ந்தவராக இருக்கிறார். மற்ற யாரும் காரைக்காலுக்கு வந்து, மக்கள் அடையும் துன்பங்களைப் பார்த்து சீர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதில்லை. முதல்வர் மட்டுமே அவ்வப்போது வந்து, தேசிய, மாநில அரசியலைப் பேசிவிட்டுச் செல்கிறார். முதல்வரும், அமைச்சர்களும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு அவர்களை திருப்திப்படுத்தும் போக்கையே முறையாக செயல்படுத்தி வருகின்றனர்.
காரைக்காலைச் சேர்ந்த அமைச்சர், அண்மையில் திருநள்ளாறு கோயில் நகர மேம்பாட்டுத் திட்டம் குறித்து அதிகாரிகளை அழைத்துப் பேசியுள்ளார். எந்த  திட்டத்துக்கு எவ்வளவு நிதியை புதுச்சேரி அரசு ஒதுக்கியுள்ளது அல்லது கடனாக பெற்றுள்ளது போன்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. அவர்களது கட்சிக்காரர்களையும் வைத்துக்கொண்டு, அதிகாரிகளை வைத்துக்கொண்டு யாரையோ திருப்திப்படுத்தும் வகையில் செயல்படுவதாகவே பார்க்கமுடிகிறது.
என்ன திட்டங்களை மக்களுக்கு அளிக்கலாம், எவ்வாறு செயல்படுத்தலாம், கடைக்கோடி மக்களுக்கும் திட்டம் போய்சேருகிறதா, மக்களின் பிரச்னைகள் என்ன, எவ்வாறு தீர்க்கலாம் என்பதை செய்வதே அமைச்சரின் கடமையாகும். ஆனால் புதுச்சேரி அமைச்சர்கள், தனியார் நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பது, அரசுத்துறைகளுடன் ஆலோசனை நடத்துவது, ஆய்வு நடத்துவது போன்ற சுய விளம்பரங்களை செய்துக்கொண்டு வருவதால் மக்களுக்கு எந்த பயனும் இருக்கவில்லை.
காரைக்கால் ஆட்சியரகத்தை சுற்றி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறித்த காலத்துக்குப் பின் இதனை ரத்து செய்துவிடவேண்டும். ஆனால் தேவையில்லாமல் அது நீட்டிப்பு செய்யப்பட்டுவருகிறது. 
ஆட்சியரகத்திற்குள்  சாதாரண மனிதர்கள் செல்லமுடியவில்லை. சுற்றுவட்டாரத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த முடியவில்லை. இதுகுறித்தெல்லாம் எந்த அரசியல் கட்சியும் அரசை எதிர்த்து வாய் திறக்கவில்லை. தடை நீடிப்பு செய்வதன் மூலம் அரசு தமது
 கையாளாகாத போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
காரைக்கால் பகுதி எம்.எல்.ஏ.க்களும் அரசின் போக்கை கண்டிக்க முன்வருவதில்லை. இந்த நிலை நீடித்தால் அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் காரைக்காலில் சுயேச்சைகளின் வெற்றி ஏற்படுவது உறுதியாகும்.
அரசு எவ்வாறெல்லாம் காரைக்காலைப் புறக்கணிக்கிறது என்பதை மக்களும் பார்த்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள். காரைக்கால் தனி  யூனியன் பிரதேசம் உருவாவது மட்டுமே காரைக்கால் மக்கள் தலை நிமிர்ந்து வாழ்வதற்கான சூழலை உருவாக்கும். அதற்கான பணியை போராட்டக் குழு தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.