நல்லம்பல் ஏரி சுற்றுலா மையமாகத் திகழ நடவடிக்கை: அமைச்சர் ஆர். கமலக்கண்ணன்

நல்லம்பல் ஏரி பகுதி சுற்றுலா மேம்பாட்டு மையமாகத் திகழ்வதற்கு புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து

நல்லம்பல் ஏரி பகுதி சுற்றுலா மேம்பாட்டு மையமாகத் திகழ்வதற்கு புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் தெரிவித்தார்.
காரைக்கால் மாவட்ட சமுதாய நலப் பணித் திட்டம் (சிஎஸ்எஸ்) சார்பில் திருநள்ளாறு கொம்யூன், நல்லம்பல் ஏரிக்கரையில் பள்ளி மாணவர்களால் பனை விதைப்பு செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர். கமலக்கண்ணன் விதைப்புப் பணியை தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் கூறியது : சுற்றுலாவினரை ஈர்க்கும் வகையில் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நல்லம்பல் ஏரி உருவாக்கப்பட்டது. தொடக்கத்தில் ஏரிக்  கரைகள் வலிமையாக இருந்த நிலையில், காலப்போக்கில் இயற்கை சீற்றங்களால் வலுவிழந்துவிட்டன. மாணவர்களிடையே மரம் குறித்து தெளிவான விழிப்புணர்வு ஏற்படும் விதத்திலும், மனித சமூகத்துக்கு நீண்ட கால பயனுள்ளதாக மரங்கள் இருப்பதை உணர்ந்து, இதுபோன்ற நிகழ்ச்சியை அமைத்த சிஎஸ்எஸ் அமைப்பினருக்கு பாராட்டுகள். கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துவிட்டன. காரைக்காலிலும் சுமார் 10 ஆயிரம் மரங்கள் சாய்ந்துவிட்டன. இதுபோன்ற இயற்கை சீற்றத்தைத் தணிக்கும் வகையிலான திறன், பனை மற்றும் சவுக்கு மரங்களுக்கு உண்டு என்பதால், தற்போது ஏரிக் கரையில் குறிப்பிட்ட பகுதி வரை சுமார் 2 ஆயிரம் பனை விதைப்பு செய்யப்படுகிறது. அடுத்த வாரம் ஏரிக்கரை முழுவதும் பனை விதைப்பு செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
திருநள்ளாறு கோயில் நகரமாக விளங்குகிறது. இந்த பகுதியில் உள்ள நல்லம்பல் ஏரியை மேலும் மேம்படுத்தி உள்ளூர் மக்களுக்கும், வெளியூரிலிருந்து வருவோர் மகிழும் வகையில்  செயல்பாடுகளை மேற்கொள்ள உத்தேச கோப்புகள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. 
புதுச்சேரி முதல்வர், சுற்றுலாத்துறை அமைச்சருடன் இதுகுறித்து பேசி வருகிறேன். மக்களுக்கு பயனுள்ள வகையில், நல்லம்பல் ஏரியை மேம்படுத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார் அமைச்சர்.
நிகழ்ச்சியில், கல்வித்துறை துணை இயக்குநர் (பொ) கேசவ், முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) அ. அல்லி, பள்ளி துணை வட்ட ஆய்வாளர்கள் கார்த்திகேசன், பொன். சௌந்தரராசு, சமுதாய நலப் பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி. முருகன் மற்றும் பள்ளிகளின் சமுதாய நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்கள் சுமார் 300 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பனை விதைப்பு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com