சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்வாக விதைப் பந்துகள் தயாரிப்புப் பணியை காரைக்கால் நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
உள்ளாட்சித் துறையின் வழிகாட்டுதலின்படி, காரைக்கால் நகராட்சி நிர்வாகம் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, ஜூன் 5 முதல் 25-ஆம் தேதி வரை பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை
நடத்திவருகிறது. இதில் ஒரு நிகழ்வாக, காரைக்காலில் பல்வேறு இடங்களில் மரம் வளர்ப்புத் திட்டத்தில் விதைப் பந்துகள் தயாரிப்புப் பணியை நகராட்சி நிர்வாகத்தினர் வியாழக்கிழமை தொடங்கினர். ஆட்சியரகம் அருகே உள்ள பூங்காவில் மாவட்ட துணை ஆட்சியர் எஸ். பாஸ்கரன், நகராட்சி ஆணையர் எஸ்.சுபாஷ், வனத்துறை அதிகாரி ஆமினா பீபி ஆகியோர் பங்களிப்புடன் நகராட்சி ஊழியர்கள், ஹேண்ட் இன் ஹேண்ட் திட்ட ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த பணி குறித்து நகராட்சி ஆணையர் கூறியது: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தின நாளை ஒரு நாள் நிகழ்வோடு முடித்துக்கொள்ளாமல், 2 வாரங்களுக்கு மேல் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, மக்களுக்கு விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
நிகழாண்டு பருவ மழை தொடங்கும் முன்பாக காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தூவும் விதத்தில், விதைப் பந்துகள் தயாரிக்கப்படுகின்றன. வேம்பு, புளியன், நாவல், புங்கன், இளுப்பை உள்ளிட்ட விதைகளை, நகராட்சி தயாரிப்பான தொழு உரம் மற்றும் மண் புழு உரங்களால் ஆயிரக்கணக்கான விதைப் பந்துகள் தயாரிக்கப்படவுள்ளன. இவற்றை மரங்கள் வளரக்கூடிய தரமான மண் பாங்கான இடங்களில் தூவும்போது, அடுத்த சில ஆண்டுகளில் மரங்கள் வளரும் என நம்புகிறோம். இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது. இதுபோன்று மக்களும் தங்களை இப்பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு, தங்களது வசிப்பிடங்களில் மரங்கள் வளர்ப்பில் ஈடுபட முன்வரவேண்டும் என்றார்.
நகரில் குப்பைகள் அகற்றம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தி வரும் ஹேண்ட் இன் ஹேண்ட் நிறுவன துணைப் பொதுமேலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் விதைப் பந்து தயாரிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.