அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் ஓய்வூதியத் திட்ட அறிமுக நிகழ்ச்சி காரைக்காலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரதம மந்திரியின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இந்த திட்டம் குறித்து காரைக்காலில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, காரைக்கால் காமராஜர் நிர்வாக வளாகத்தில் நடைபெற்றது. திட்டத்தை அறிமுகம் செய்துவைத்து மாவட்ட துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன் பேசினார்.
தொழிலாளர் துறையினர் பேசும்போது, இந்த திட்டத்தில் 18 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களும், அரசுப் பணியில் இல்லாதவர்களும், வருமான வரி செலுத்தாதவர்களும் மாத தவணை முறையில் இணையலாம். 40 வயது வரை தவணை, தங்களது கணக்கிலிருந்து பெறப்படும். 60 வயதிற்குப் பின் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் இணைய ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்துடன் அருகில் உள்ள பொது சேவை மையத்தை நேரில் அணுகி பதிவு செய்து, முதல் தவணையை செலுத்தவேண்டும் என்றனர். இந்த திட்டத்தில் சேரும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையை துணை ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் அதிகாரி சுக.செந்தில்வேலன், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அமலாக்க அதிகாரி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.