பொலிவிழக்கும்காரைக்கால் கடற்கரை..?

கோடை விடுமுறையையொட்டி, காரைக்கால் கடற்கரைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்றனர். கடற்கரையில்


கோடை விடுமுறையையொட்டி, காரைக்கால் கடற்கரைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கூடுகின்றனர். கடற்கரையில் மக்களை மகிழ்விக்கவோ, பாதுகாக்கும் வகையிலான அம்சங்களோ மிகக் குறைவாக இருப்பதாகவும், சுகாதாரச் சீர்கேடான பகுதியாக கடற்கரை மாறி வருவதாகவும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
 காரைக்கால் கடற்கரை சுற்றுவட்டாரம் இயற்கையாகவே அழகாக அமைந்துவிட்டது என்றே கூறலாம்.  காரைக்கால் அரசலாற்றுப் பாலத்திலிருந்து சுமார் 1 கி.மீட்டர் தூரம் நேரான சாலை, சாலையின் இடதுபுறத்தில் நடைமேடை, நடைமேடையில் பொதுமக்கள் உட்காருவதற்கு கான்கிரீட் பெஞ்சுகள், வலது புறத்தில் அரசலாறு, அரசலாறு கடலில் கலக்கும் முகத்துவாரம், நீர் நிலையுடன் கூடிய அலையாத்திக் காடு, அரசு நிர்வாகத்தின் சீகல்ஸ் உணவகம், குழந்தைகள் பூங்கா, நவீன கழிப்பறை, ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் வகையில் பரந்த மணல் பரப்பு, கடற்கரையிலிருந்து வெளியேற குறுக்கு சாலைகள் உள்ளிட்டவை மக்கள் அதிகமாக கடற்கரைக்கு வருவதற்கு முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றன. 
கடற்கரையை பல்வேறு கட்டங்களாக மத்திய அரசின் சுற்றுலா நிதியில் மேம்படுத்தும் நோக்கில் முதல்கட்ட திட்டம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. குறுக்குச் சாலைகள், நடைமேடை, உயர் மின் கம்பங்கள், பீச் மர்ஷே என்கிற தங்கும் விடுதி கட்டடம் கட்டுமானம் நிறைவு ஆகியவற்றைக் கூறலாம். 
காரைக்கால்  அரசலாற்று பாலத்திலிருந்து கடற்கரை சாலையில் கடற்கரைக்குச் செல்வோர் இருசக்கர வாகனம், கார்களில் மட்டுமே பயணிக்க முடியும். பேருந்தில் வந்திறங்குவோர் கடற்கரைக்குச் செல்ல வசதிகள் செய்யப்படவில்லை.
மத்திய சுற்றுலா அமைச்சக நிதியில் கட்டப்பட்ட நடைமேடை பகுதிகள் சிதிலமடைந்து நடந்து செல்லக்கூட லாயக்கற்று காணப்படுகிறது. அனைத்து கான்கிரீட் பெஞ்சுகளும் அதனுள் இருக்கும் கம்பிகளை திருட சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு உருக்குலைந்து போய்விட்டன. 
நடைமேடையில் உள்ள உயரம் குறைவான அலங்கார மின் விளக்குகள் உடைக்கப்பட்டுவிட்டன. கடற்கரை, கடற்கரைச் சாலைகளில் மாடுகள் நடமாட்டம் மிகுதியாக இருப்பதால், இதன் கழிவுகள் சாலையிலும், நடைமேடையிலும் அகற்றப்படாமல் அப்படியே இருக்கின்றன.
கடற்கரைச் சாலையின் வலதுபுறத்தில் அரசலாறு கடலை நோக்கி செல்கிறது. தண்ணீர் எப்போதும் இருக்கும் இந்த ஆற்றில், மீன்பிடிப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் இந்த சாலையை பயன்படுத்துவதால், கடற்கரையில் மக்கள் நடந்து செல்லும்போது பல்வேறு சிரமத்தை சந்திக்கிறார்கள். இவர்களை ஆற்றின் மறுகரையை பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தும், மீனவர்கள் அதனை ஏற்கவில்லை.  
கடற்கரையிலும், கடற்கரையையொட்டி குறுக்குச் சாலையிலும் உள்ள உயர் மின் கம்பங்களில் உள்ள பல்புகள் உடைக்கப்பட்டுள்ளன. சீரமைப்பு செய்யப்படாததால் பல இடங்கள் இருள்சூழ்ந்து காணப்படுகின்றன. 
கடலோரக் காவல்நிலையம் இருந்தும், தீவிரமான கண்காணிப்பு, ரோந்துப் பணி இருக்கவில்லை. கோடை வெயில் காலமாக இருப்பதால், இரவு நேரத்தில் இளைஞர்கள் பலர் கடற்கரைக்கு நண்பர்களுடன் சென்று, நடைமேடை, சாலையோரத்தில் உட்கார்ந்து மது அருந்துவதும், கண்ணாடி மது புட்டிகளை உடைத்துச் செல்வதுமாக உள்ளனர். இதனை கண்டறிந்து தடுக்கும் செயலை போலீஸார் மேற்கொள்ளவில்லை. மீன்பிடித் துறைமுகம் கடற்கரையிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் இருப்பதால், இங்கு இறக்கப்படும் கழிவு மீன்களால் ஏற்படும் துர்நாற்றம் 1.5 கி.மீ., சுற்றளவில் மக்களை அவதியுறச் செய்கிறது. கடற்கரைக்கு வருவோர் இந்த அவதியை சந்திக்காமல் செல்லமுடிவதில்லை.   அரசலாற்றில் படகு குழாம் இருந்தும், புதுச்சேரியில் பயன்பாட்டில் இருக்கும் நவீனப் படகுகளைப்போல கூடுதலாகன படகுகள், நவீன படகுகள் இல்லாததால் படகு குழாம் பொலிவிழந்து காணப்படுகிறது.
வெற்றிடம் ஏற்பட்டுவிடும்...
பொதுப்பணித்துறை அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள், மின்துறை அலுவலர்கள் உள்ளிட்டோருடன் கடற்கரையை  மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, மக்கள் பிரச்னைகளை அறியவேண்டும். பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான திட்டங்களை வகுக்கவேண்டும். புதுச்சேரி மாநில அரசின் நிதியை எதிர்பார்க்காமல், காரைக்காலில்  இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள், துறைமுகம் போன்றவற்றின் சமூக பொறுப்புணர்வு நிதியைப் பெற்று திட்டங்களைக் குறித்த காலத்தில் நிறைவேற்றவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. இதை செய்யாமல் ஒரு மாவட்ட நிர்வாகம் இருக்குமேயானால், கடற்கரைக்கு  செல்லும் காரைக்கால் மக்கள், வெளியூர் மக்கள் காலப்போக்கில் இந்த ஆர்வத்தை குறைத்துக்கொண்டுவிடுவர். மக்களுக்கும் காரைக்காலில் பொழுதுபோக்குக்கான எந்த அம்சமும் இல்லாத வெற்றிடம் ஏற்பட்டுவிடும். 
திருநள்ளாறு கோயில், அம்மையார் கோயிலை மையமாக வைத்து காரைக்காலை ஆன்மிக சுற்றுலாத்தலமாக அரசு கூறுகிறது. இதுவொருபுறமிருக்க, கடற்கரையைக் காண வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட தலங்களுக்கு வெளியூரிலிருந்து வருவோர் வருவதையும் கருத்தில்கொண்டு மேம்படுத்துவதே சிறந்த செயலாக இருக்கும்.
எம்எல்ஏ கருத்து: இதுகுறித்து காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா  கூறும்போது,  கோடை காலம் என்பாதல் கடற்கரைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகம். இங்கு மின் விளக்குகள் சரியாக எரியவில்லை. குறிப்பாக 50 சதவீத விளக்குகள் எரியவில்லை. இதனால் சமூக விரோத செயல்பாடுகள் ஏற்படுகின்றன. கடற்கரைக்குச் செல்லும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. மீனவர்கள் படகுளை அரசலாற்றில் கடற்கரை சாலை தடுப்பில் கட்டி சிதிலப்படுத்துவதால், சாலையில் செல்வோருக்கு அச்சம் ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் காரைக்காலில் அரசுத்துறைகள் ஒருங்கிணைந்து சீரமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
சமூக ஆர்வலர் ஏ.எம்.இஸ்மாயில் கூறும்போது, புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் காரைக்காலுக்கு வருவதே இல்லை. சுற்றுலாத்துறையே காரைக்காலில் செயல்படவில்லை. இத்துறை உதவி இயக்குநர், பணியிலிருந்த யுடிசி ஆகியோர் பணி ஓய்வு பெற்றுவிட்டனர்.  காரைக்காலுக்கான சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தை அரசும் செயல்படுத்தவில்லை. இருக்கும் திட்டங்களைக்கூட பராமரிப்பதில்லை. காரைக்கால் மக்களுக்குரிய ஒரே பொழுதுபோக்குக்குரிய  மையம் கடற்கரை 
என்கிறபோது, இதை மேம்படுத்தி, இதனால் அரசுக்கு வருவாய் ஏற்படுத்தும்  சூழலைச் செய்யலாம். புதுச்சேரி அரசு இதன் 
மீது சிறப்பு கவனம்  செலுத்தவேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com