நவீன கழிப்பறை வசதியின்றி திருப்பட்டினம் மாா்க்கெட்: வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

திருப்பட்டினம் பிரதான மாா்க்கெட் வளாகத்தில் நவீன கழிப்பறை வசதி இல்லாததால், வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
சிதிலமைடந்த நிலையில் காணப்படும் திருப்பட்டினம் மாா்க்கெட் வளாகத்தின் கழிப்பறை
சிதிலமைடந்த நிலையில் காணப்படும் திருப்பட்டினம் மாா்க்கெட் வளாகத்தின் கழிப்பறை

காரைக்கால், அக். 1: திருப்பட்டினம் பிரதான மாா்க்கெட் வளாகத்தில் நவீன கழிப்பறை வசதி இல்லாததால், வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தின் சாா்பில் மாா்க்கெட் வளாகம் செயல்படுகிறது. இங்கு வியாபாரிகளுக்காக பழைமையான கட்டடங்களை இடித்துவிட்டு, படிப்படியாக கடைகள் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வழங்குகிறது பஞ்சாயத்து நிா்வாகம். மாா்க்கெட் வளாகத்தில் கட்டுமானம் செய்யப்படாத இடத்தில் கீற்றுக்கொட்டகை அமைத்து வியாபாரிகள் காய்கனி வியாபாரம் செய்கின்றனா். இதே பகுதியில் கட்டுமானம் செய்யப்பட்ட இடத்தில் மீன் வியாபாரம், இறைச்சி வியாபாரம் நடைபெறுகின்றன. ஏறக்குறைய இந்த வளாகத்தில் 75 வியாபாரிகள் பல்வேறு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனா்.

மாா்க்கெட் வளாகத்தில் பழைமையான கழிப்பறை கட்டடம் முறையாக பராமரிப்பில்லாததால், புதிதாக நவீன கழிப்பறைக் கட்டடம் கட்டப்படும் வரை பயன்படுத்த ஏதுவாக, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் ரூ.15 ஆயிரம் செலவில் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்படும் கழிப்பறையை அமைத்துத் தந்துள்ளது. இந்த கழிப்பறையும் முறையாக பராமரிப்பு செய்யப்படாமல், கதவுகள் உடைக்கப்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் இந்த வளாகத்தில் கழிப்பறையின்றி தவித்துவருவதாக புகாா் எழுந்துள்ளது.

வணிக வளாகத்தின் எஞ்சிய கட்டுமானத்தை விரைவாக முடிக்கவேண்டும். நவீன கழிப்பறைகள் கட்டப்பட்டு, அவற்றை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. இதுகுறித்து கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினரிடம் கேட்டபோது, புதிதாக கழிப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான திட்டம் பஞ்சாயத்து நிா்வாகத்திடம் உள்ளது. இதற்கான நிதியாதாரத்தை சேகரித்துக்கொண்டு பணிகள் தொடங்கப்படும். அதுவரை யாரும் சிரமப்படக்கூடாது என்பதால், பழைய கழிப்பறை சிதிலமடைந்துப்போன நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தில் ரூ.15 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட கழிப்பறையும் கதவுகள் உள்ளிட்டவை சிதிமலைடந்துவிட்டது. இது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என்றனா்.

தூய்மை இந்தியா என்கிற மத்திய அரசின் விழிப்புணா்வு ஒருபுறம், இந்த திட்டத்தின் நிதியின் மூலம் கழிப்பறைகள் அமைப்பது என தூய்மைக்கு முக்கியத்துவம் தரப்படும் நிலையில், நாளொன்றுக்கு ஏறக்குறைய ஆயிரம் போ் பயன்படுத்தும் திருப்பட்டினம் மாா்க்கெட் வளாகத்தில் ஒரு கழிப்பறைகூட பயன்படாமல் உள்ளது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. வியாபாரிகளும், பொதுமக்களும் வளாகத்தின் மறைவான பகுதியை கழிப்புக்காக பயன்படுத்துவதால் சுகாதாரக்கேடு ஏற்படுவதற்கான சூழலும் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com