காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினரின் தேர்தல் பணி திருப்தியாக உள்ளது: அமைச்சர் எம். கந்தசாமி பாராட்டு

காரைக்காலில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினரின் தேர்தல் பணி திருப்தியளிக்கும்படி உள்ளது என்று நலத்துறை அமைச்சர் எம். கந்தசாமி பாராட்டுத் தெரிவித்தார்.
Published on
Updated on
1 min read

காரைக்காலில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினரின் தேர்தல் பணி திருப்தியளிக்கும்படி உள்ளது என்று நலத்துறை அமைச்சர் எம். கந்தசாமி பாராட்டுத் தெரிவித்தார்.
 காங்கிரஸ், திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை முதல்கட்டமாக சந்தித்துப் பேசும் வகையில், புதுச்சேரி நலத்துறை அமைச்சர் எம். கந்தசாமி சனிக்கிழமை இரவு காரைக்காலுக்கு வந்தார். கூட்டணிக் கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் திமுக அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிமை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கீதாஆனந்தனை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பிற நிர்வாகிகளையும் அமைச்சர் சந்தித்து மக்களவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் எம். கந்தசாமி கூறியது: புதுச்சேரி மாநில அரசு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தியுள்ளதையும், மத்திய மோடி அரசால் மக்கள் படும் துயரங்களை எடுத்துக்கூறியும் காங்கிரஸ் கட்சி, மக்களவைத் தொகுதி வேட்பாளர் வி.வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறது. திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காரைக்காலில் கூட்டணிக் கட்சியினரை சந்தித்து, தேர்தல் தொடர்பான ஆலோசனை நடத்தினேன். அவர்கள் செய்யும் பணிகளை கேட்டறியும்போது மிகவும் திருப்தியாக இருக்கிறது. நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் காரைக்கால் மாவட்டத்தில் காங்கிரஸுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் காரைக்கால் வந்து கூட்டணிக் கட்சி 
நிர்வாகிகளை சந்திப்பதுடன், பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன் என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com