பாஜக தமிழ் இனம், மண்ணுக்கு எதிரானது: ப. சிதம்பரம்
By DIN | Published On : 01st April 2019 07:59 AM | Last Updated : 01st April 2019 07:59 AM | அ+அ அ- |

பாஜக தமிழ் இனத்துக்கும், தமிழ் மண்ணுக்கும் எதிரானது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் சாக்கோட்டைமேற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் கோட்டையூர் பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் பேசியது: தேர்தல் என்பது மக்களுக்கானது. அப்போது அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வரும் கட்சிகள் நிறைவேற்ற வேண்டும். திமுக ஆட்சியின் போது சொன்னதை செய்தார்கள். அதேபோன்று காங்கிரஸும் நூறு நாள் வேலைத்திட்டம், விவசாயக் கடன் ரத்து, கல்விக்கடன் போன்ற வாக்குறுதிகளை அளித்தோம். அதனை நிறைவேற்றவும் செய்தோம். காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் ஏராளமான வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன. அதில் தமிழகத்தில் சிவகங்கை தொகுதியில்தான் அதிக அளவில் வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன. இதுபோன்ற நீண்ட பட்டியல் இருக்கிறது. திமுக ஆட்சியிலும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் பாஜக என்ன செய்தது. அவர்கள் சொன்ன எந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றி
உள்ளனரா. ஆனால் சொல்லாததைத்தான் செய்தார்கள். ரூ. 500, 1000 நோட்டுகளை மதிப்பிழப்பு செய்தவர் மோடி. அவருக்கு யார் இந்த அதிகாரத்தைத் தந்தது. ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை பறித்துக் கொண்டு இவரே பணமதிப்பு இழப்பை தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.
தமிழ் மண்ணில் பகுத்தறிவு சுயமரியாதையை விதைத்தவர் தந்தை பெரியார். பெண்களுக்கு அடிப்படை உரிமை, சொத்துரிமை, கலப்புத் திருமணம் போன்ற புரட்சி விதையை விதைத்தவர் பெரியார். அவரது வழியில் காமராஜர், அண்ணா போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று பாஜக தமிழகத்துக்கு பெரும் சவாலாக வந்துள்ளது.
பாஜக தமிழ் இனத்துக்கும், தமிழ் மண்ணுக்கும் எதிரானது. வடநாட்டில் வேண்டுமென்றால் பாஜக வளர்ந்திருக்கலாம். ஆனால் தமிழகத்தில் அந்த இயக்கத்தை வளரவிடக்கூடாது. கருணாநிதி இல்லாத முதல் தேர்தலை தமிழகம் சந்திக்கிறது. அவர் மேல் உண்மையான அன்பு வைத்திருப்பவர்கள் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று உங்களுடனே இருந்து பணியாற்றுவார். நானும் அவரோடு இருந்து உங்களுக்காகப் பணியாற்றுவேன் என்றார்.
கூட்டத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், முன்னாள் அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான கே.ஆர். பெரியகருப்பன், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமி, மதிமுக மாவட்டச் செயலாளர் புலவர் செ. செவந்தியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கண்ணகி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் என். சுந்தரம், சுப. துரைராஜ், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கே.எஸ். ஆனந்தன் உள்ளிட்டோர் பேசினர்.