ஹோமியோபதி மருத்துவ விழிப்புணர்வு முகாம்
By DIN | Published On : 01st April 2019 07:51 AM | Last Updated : 01st April 2019 07:51 AM | அ+அ அ- |

காரைக்கால்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஹோமியோபதி மருத்துவம் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்திய மருத்துவ முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் நடைபெற்ற இம்முகாமில் நலவழித் துறை துணை இயக்குநர் (பொ) கே. மோகன்ராஜ் தலைமை வகித்து, முகாமை தொடங்கிவைத்தார். மருத்துவர்கள் ராஜீ, சேவற்கொடியோன், சிந்து, சரவணக்குமார் ஆகியோர் பங்கேற்று கிராம மக்களிடையே ஹோமியோபதி மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து விரிவாகப் பேசினர்.
இயற்கை மருத்துவத்தின் மீதான ஆர்வம் மக்களிடையே பெருகியுள்ளது குறித்தும், இந்த மருத்துவத்தில் மருந்துகள் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்ற விவரங்களையும் மருத்துவர்கள் விளக்கிக் கூறினர்.
முகாமில் மருத்துவ மூலிகைகளின் கண்காட்சி நடத்தப்பட்டது. மூலிகைப் பொருள்களின் பயன்பாடுகள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானிய வகைகள், மருந்து வகைகளின் தொகுப்பு ஆகியவை இடம் பெற்றிருந்தன. காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கிராமத்தினர் முகாமில் பங்கேற்று கருத்துகளைக் கேட்டறிந்ததோடு, கண்காட்சியைப் பார்வையிட்டு, மூலிகைகள் குறித்து அறிந்துகொண்டனர். முகாமில் கலந்துகொண்டோருக்கு இலவச ஹோமியோபதி மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பொதுமக்களின் சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.