ஓஎன்ஜிசி பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல்
By DIN | Published On : 01st April 2019 07:50 AM | Last Updated : 01st April 2019 07:50 AM | அ+அ அ- |

ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதியில் இயங்கிவரும் ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில் பயிலும் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டல் மற்றும் அறிவுரை வழங்குதல் என்ற தலைப்பிலான கருத்துப்பட்டறை சனிக்கிழமை நடைபெற்றது.
ஓஎன்ஜிசி பொதுப் பள்ளித் தாளாளர் கண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் டாக்டர் கணபதி வெங்கடசுப்பிரமணியன் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில், பள்ளித் தாளாளர் கண்ணன் பேசும்போது, "மாணவர்களுக்கு இக்கருத்துப் பட்டறையானது வழக்கமான பயிற்சி போல இல்லாமல், மிகவும் பயன்தரக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. அதனால், மாணவர்கள் இதுபோன்ற கருத்துப் பட்டறையில் கவனத்தை சிறந்த முறையில் செலுத்துவதன் மூலம் வளமான எதிர்காலத்தை அடையலாம்' என்றார்.
சிறப்பு விருந்தினர் கணபதி வெங்கடசுப்ரமணியன் பேசும்போது, "மாணவர்கள் தங்களது வருங்காலத்தை தீர்மானிக்கும் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பது குறித்து விளக்கிக் கூறினார். மாணவர்கள் தங்களது முடிவை தாமே தீர்மானிக்கவேண்டும். பெற்றோர்கள் தங்களது விருப்பத்தை தன் குழந்தைகள் மீது திணிக்கக்கூடாது. மாணவர்கள் தாங்களாகவே நம்பிக்கை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு செய்வதால் வாழ்வில் ஏற்படும் தடைகளை எளிமையாகத் தகர்க்க முடியும்.
அது மட்டுமல்லாமல் பேச்சுத்திறன், எழுத்துத்திறன், ஆளுமைத்திறன் ஆகியவற்றை சுயமாக வளர்த்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் பாராட்டும் போது ஏற்றுக்கொண்டும், வெறுக்கும்போது பொறுத்துக் கொள்ளக்கூடிய மனப்பாங்கினை உருவாக்கிக் கொண்டால் வாழ்வானது மேன்மைப்பெறும். மாணவர்கள் தங்களது மனம் போன போக்கிற்கு வாழாமல் உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழக்கூடியப் பயிற்சி பெறுதல் நல்லதொரு எதிர்காலத்துக்கு வாய்ப்பாக அமையும்' என்றார். முன்னதாக, பள்ளி முதல்வர் சுவாமிநாதன் வரவேற்றுப் பேசினார். துணை முதல்வர் எட்வின் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.