காரைக்காலில் 23 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
By DIN | Published On : 11th April 2019 09:27 AM | Last Updated : 11th April 2019 09:27 AM | அ+அ அ- |

காரைக்கால் மாவட்டத்தில் 23 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று தேர்தல் அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, புதுச்சேரி தொகுதியை சேர்ந்த காரைக்காலில் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகளை தேர்தல் துறை செய்துவருகிறது.
காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தின் பாதுகாப்பு அறையில் 164 வாக்குச் சாவடிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களின் பெயர்கள் பொருத்தும் பணி 3 நாள்களாக நடைபெற்று முடிந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் உள்ள பகுதியில் ஆயுதம் ஏந்திய போலீஸார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வட்டாரத்தில் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்தவாறு கண்காணிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் எத்தனை வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்பது குறித்து மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ஏ. விக்ரந்த் ராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியது:
தற்போது வரை 23 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 15 வாக்குச் சாவடிகளில் வெப்கேமராக்கள் மூலம் வாக்குப் பதிவின் போது கண்காணிக்கப்படும். மத்திய காவல் படையினர் இங்கு கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.