காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவுக்காக கண்ணாடி ரதம் உள்ளிட்டவை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
காரைக்காலில் புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் தர்கா அமைந்துள்ளது. சவூதி அரேபிய பகுதியிலிருந்து 18-ஆம் நூற்றாண்டில் இறைபணி மேற்கொள்வதற்காக இந்தியா வந்தவர் மஸ்தான் சாஹிப். தமிழகத்தில் திருச்சி, நாகூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்கி இறைபணியாற்றி வந்து, தமது 120- ஆவது வயதில் இயற்கை எய்தினார். அவரது நினைவகமாக காரைக்காலில் தர்கா அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. நிகழாண்டு இவ்விழா ஏப்ரல் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக அன்றைய நாளில் பகல் 3 மணியளவில் கண்ணாடிகளாலான ரதம் மற்றும் பல்லக்கு ஊர்வலம் தர்காவிலிருந்து பல்வேறு வீதிகளுக்குச் சென்று திரும்பும் வகையில் நடைபெறும். இரவு 9 மணியளவில் தர்கா வந்தடையும்போது தர்காவின் முன்பு நிறுவப்பட்ட பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடிகள் ஏற்றப்படும். ஊர்வலத்தில் கொண்டுசெல்லப்படும் ரதத்தைக் காண வெளியூர்களில் இருந்து ஏராளமான மக்கள் காரைக்காலுக்கு வருகை தருவர். கொடி ஊர்வலத்துக்காக தர்கா வளாகத்தில் தற்போது பெரிய, சிறிய ரதம், பல்லக்குகள் அழகுப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பெரிய ரதம் 34 அடி உயரம், சிறிய ரதம் 28 அடி உயரம், பல்லக்கு 26 அடி உயரத்தில் அமைகிறது. காரைக்கால் கந்தூரி விழாவில் பயன்படுத்தப்படும் ரதம், சிறந்த வேலைப்பாடுகள் கொண்டதென கூறப்படுகிறது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து ஏப்ரல் 24-ஆம் தேதி சந்தனக்கூடு ஊர்வலமும், நள்ளிரவு சந்தனம் பூசும் நிகழ்வும், இறுதியாக ஏப்ரல் 27-ஆம் தேதி கொடியிறக்கமும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.