மஸ்தான் சாஹிப் தர்கா கந்தூரி விழா சந்தனக் கூடு ஊர்வலம்
By DIN | Published On : 26th April 2019 12:58 AM | Last Updated : 26th April 2019 12:58 AM | அ+அ அ- |

புகழ்பெற்ற காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவையொட்டி, புதன்கிழமை இரவு சந்தனக் கூடு ஊர்வலம் நடத்தப்பட்டு வியாழக்கிழமை காலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெற்றது.
மஸ்தான் சாஹிப் வலியுல்லாவின் நினைவாக காரைக்காலில் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் கந்தூரி திருவிழா ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு 196-ஆம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக வீதிகளில் கண்ணாடி ரதம், பல்லக்குகள் பல்வேறு வீதிகளின் வழியே பேண்டு வாத்தியங்களுடன் சென்று பள்ளிவாசலை சென்றடைந்தன. இரவு திரளானோர் முன்னிலையில் பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடியேற்றப்பட்டது. இரண்டாவது முக்கிய நிகழ்ச்சியாக மின் அலங்கார சந்தனக் கூடு ஊர்வலம் பள்ளிவாசல் பகுதியிலிருந்து புறப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறிய ரதங்களும் சென்றன. பல்வேறு வீதிகளின் வழியே சந்தனக்கூடு ஊர்வலம் சென்று வியாழக்கிழமை அதிகாலை தர்காவை சென்றடைந்தது.
தொடர்ந்து, வலியுல்லாவின் ரவ்லா ஷரீபில் காலை 3.30 மணியளவில் சந்தனம் பூசப்பட்டு, ஹலபு என்னும் போர்வை போர்த்தப்பட்டது. சனிக்கிழமை இரவு (ஏப்ரல் 27) வலியுல்லா பெயரில் குர்-ஆன் ஷரீப், மவுலூது ஷரீப் மற்றும் துஆ செய்யப்பட்டு கொடியிறக்கம் செய்யப்படுகிறது. சந்தனக் கூடு விழாவில் காரைக்கால் பகுதி முக்கிய பிரமுகர்கள், சமாதானக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.