இ-சேவை மூலம் சான்றிதழ்கள் பெறும் முறையால் மக்கள் அவதி: நுகர்வோர் சங்கம் கண்டனம்

இ-சேவை மூலமாக சான்றிதழ்கள் பெறும் முறையால் மக்கள் கடும் அவதிப்படுவதாக நுகர்வோர் சங்கம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

இ-சேவை மூலமாக சான்றிதழ்கள் பெறும் முறையால் மக்கள் கடும் அவதிப்படுவதாக நுகர்வோர் சங்கம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
திருநள்ளாறு நுகர்வோர் நடவடிக்கைக் குழுத் தலைவர் வைஜெயந்திராஜன் வெளியிட்ட அறிக்கை: வருவாய்த்துறை மூலம் இதுவரை கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையின்படி வழங்கப்பட்டுவந்த ஜாதி, வருமானம், குடியிருப்பு, குடியுரிமை மற்றும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்தார் வழங்கும் பிறந்த பதிவுகள் போன்றவை இ-சேவை மூலம் புதுச்சேரி அரசு பெறுவதற்கு நடவடிக்கை எடுத்து அமல்படுத்தியுள்ளது. இதற்காக பொதுமக்கள், மாணவர்கள் பொது சேவை மையங்களுக்கு படையெடுக்கிறார்கள். நகரப் பகுதியில் உள்ள மையங்களுக்கு கிராமப்புற மக்கள் பல இன்னல்களைச் சந்தித்து செல்கிறார்கள். அரசுத்துறையின் மூலம் சிறிய உதவித் தொகையை பெறவும் மேற்கண்ட சான்றிதழ் பெறவேண்டியுள்ளது. காரைக்கால் மாவட்டத்தில் போதுமான எண்ணிக்கையில் இந்த மையங்கள் இல்லை. குறைந்த எண்ணிக்கையில் உள்ள மையங்களில் திரளானோர் வரிசையில் நிற்கவேண்டிய நிலை உள்ளது. இங்கு வசூலிக்கப்படும் கட்டணமும் அதிகமாக உள்ளதாக புகார் கூறப்படுகிறது. தமிழகத்தில் இதுபோன்ற சான்றிதழ், பட்டா பெறுதல் போன்றவை ஆன்லைன் மூலம் வழங்கப்படுகிறது. ஆனால் சிறிய மாநிலமான புதுச்சேரியில், இந்த திட்டம் முழு வெற்றிபெற்றதாக கூறமுடியவில்லை.  குறிப்பாக அரசின் உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க வேண்டிய தேதி நிகழ்மாதம் 30-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. மேற்கண்ட அலைச்சல், சான்றிதழ் பெற வரிசையில் காத்திருத்தல் போன்றவற்றால் குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே இந்த திட்டத்தை மேலும் எளிமைப்படுத்தத் தேவையான நடவடிக்கையை புதுச்சேரி அரசு எடுக்கவேண்டும். வருவாய்த்துறை அலுவலகத்திலேயே இ-சேவை மையம் அமைத்து, கூடுதல் கணினி வசதிகளுடன் செயல்படும்பட்சத்தில் மக்கள் அந்த அலுவலகத்தை நாடி சான்றிதழ் பெற்றுக்கொள்வர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்தி, மக்கள் அவதிப்படாமல் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com