காரைக்கால் கோயில்பத்து பார்வதீசுவர சுவாமி தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினர் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
காரைக்கால் கோயில்பத்து பகுதியில் பாடல்பெற்ற தலமாக நூற்றாண்டுகள் பழைமையான சுயம்வர தபஸ்வினி அம்பாள் சமேத பார்வதீசுவரர் கோயில் உள்ளது. இக்கோயில் சார்புடையதாக கோதண்டராம பெருமாள் கோயில், ஞான சம்பந்த விநாயகர் கோயில், பிள்ளைத்தெருவாசலில் ஐயனார் கோயில், கோயில்பத்துப் பகுதியில் ஏழை மாரியம்மன் கோயில், சொக்கநாதர் கோயில் மற்றும் அண்ணா கலைக் கல்லூரி எதிரே முனீஸ்வரன் கோயில்கள் உள்ளன. இக்கோயில் அறங்காவல் வாரியத்தை புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறை அண்மையில் நியமித்தது. தலைவராக எஸ்.எம்.டி.மாடசாமி, துணைத் தலைவராக எஸ்.சுந்தரமூர்த்தி, செயலாளராக குரு.முத்துசாமி, பொருளாளராக எஸ்.பந்தாமன், உறுப்பினராக டி.இளங்கோவன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இக்குழுவினர் பார்வதீசுவரர் கோயிலில் புதன்கிழமை பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். முன்னதாக விநாயகர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர். புதிய அறங்காவல் வாரியத்தினருக்கு பரிவட்டம் கட்டி சிவாச்சாரியார்கள் மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏ.வி.சுப்பிரமணியன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும், கோயில் சுற்றுவட்டார முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.