கோட்டுச்சேரி அரசுப் பள்ளியில் கணிதக் கண்காட்சி
By DIN | Published On : 06th February 2019 07:02 AM | Last Updated : 06th February 2019 07:02 AM | அ+அ அ- |

கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதக் கண்காட்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் கணிதத் துறை சார்பில் நடைபெற்ற இக்கண்காட்சியில் 60 கணித மாதிரிகளை மாணவர்கள் வைத்திருந்தனர். முன்னதாக காரைக்கால் என்.ஐ.டி. கணிதத் துறை துணைப் பேராசிரியர் கோவிந்தராஜ், சதீஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கண்காட்சியை தொடங்கிவைத்துப் பேசினர். பள்ளி தலைமையாசிரியர் (பொ) மதிவாணன் வாழ்த்திப் பேசினார்.
கோட்டுச்சேரி அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை கிருத்திகா, திருமலைராயன்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி கணித ஆசிரியர் சந்தானராஜ் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த கணித மாதிரிகள் குறித்து, மாணவர்களிடம் விளக்கம் கேட்டறிந்து தேர்வு செய்தனர். பள்ளியின் அனைத்து வகுப்பு மாணவர்களும் கண்காட்சியைப் பார்வையிட்டனர். கணிதம் குறித்த பல்வேறு கருத்துகளை காட்சிப்படுத்திய மாணவர்கள் விளக்கிக் கூறினர். இக்கண்காட்சியில் 6 முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் காட்சிப் பொருளை வைத்திருந்தனர். நிகழ்ச்சி நிறைவில் பேசிய, பள்ளி கணித ஆசிரியர் எஸ். சுரேஷ், "இதுபோன்ற கண்காட்சியின் மூலம் மாணவர்கள் கணிதத்தை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். செயல்வடிவத்தில் கணிதத்தை கொண்டுசெல்லவும் இது பெரிதும் பயன்படுகிறது. பள்ளியில் தொடர்ந்து இதுபோன்ற கண்காட்சி நடத்தப்படுவதன் மூலம் மாணவர்களிடையே கணிதத்தின் மீதான ஆர்வம் பெருகி, அதன் மீதான பயம் குறைந்துவருகிறது' என்றார் அவர்.
கண்காட்சி ஏற்பாடுகளை கணித ஆசிரியர்கள் எஸ்.சுரேஷ், வசந்தி, சிவசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...