"சாலை விதிகளை கடைப்பிடிப்பதில் மாணவர்கள் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்'
By DIN | Published On : 06th February 2019 07:00 AM | Last Updated : 06th February 2019 07:00 AM | அ+அ அ- |

சாலை விதிகளை கடைப்பிடிப்பதில் மாணவர்கள் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
திருப்பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, அக்கரைவட்டம் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவை இணைந்து சமுதாய நலப்பணித் திட்டம் சார்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பெண்கள் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆர்.சிவகுமார் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார்.
காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய ஆய்வாளர் எஸ். மர்த்தினி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசியது:
மாணவர்கள் தங்களது இளம் பருவ வீரத்தைக் காட்டுவதாக நினைத்து சாலையை சாகசம் செய்யப் பயன்படுத்துகின்றனர். இதைத் தவிர்க்கவேண்டும். அனைவரும் மோட்டார் பைக்கில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்ல பழகிக்கொள்ளவேண்டும். பேருந்தில் பயணிக்கும்போது படியில் நிற்கக்கூடாது. மாணவர்கள் பிறருக்கு முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என்றார்.
காரைக்கால் சமுதாய நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.முருகன் பேசும்போது, "சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் சுலோகன், தனி நடிப்பு, ஓவியம், கட்டுரை போன்றவை மூலம் ஏற்படுத்திவருகிறோம். சாலையில் விபத்தில்லா பயணம் என்பதை ஒவ்வொருவரும் நினைத்தால் சாதித்துக் காட்ட முடியும்' என்றார். சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் எஸ்.வனிதா, கே.பிரியதர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...