மின்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
By DIN | Published On : 04th January 2019 08:34 AM | Last Updated : 04th January 2019 08:34 AM | அ+அ அ- |

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி மாநில மின்துறை ஊழியர் அனைத்து சங்கங்களின் போராட்டக் குழுவினர் வியாழக்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊதிய விவகாரம் தொடர்பாக, புதுச்சேரி மின்துறை அனைத்துச் சங்கங்களின் போராட்டக் குழுவினர் அறவித்தப்படி, புதுச்சேரி, காரைக்கால், ஏனம், மாகி உள்ளிட்ட பிராந்தியங்களில் மின்துறை அலுவலகங்கள்முன்பு காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை வியாழக்கிழை தொடங்கினர்.
இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டத்தில் பணிபுரியம் மின்துறை ஊழியர்கள், வேலை நிறுத்தம் செய்து, மின்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்துறை ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கக் கூடாது, ஒரு நபர் குழு சிபாரிசுஅடிப்படையிலான ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும், மின்துறை நிர்வாகம் உறுதியளித்தப்படி அனைத்து காலிப் பணியிடங்களையும், பதவி உயர்வு மூலம் நிரப்பவேண்டும், மின் மீட்டர் ரீடிங் கணக்கெடுப்புப் பணியினை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வேலுமயில் மற்றும் பழனி ஆகியோரது தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மின்துறை ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.