காரைக்காலுக்கு மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்: நில வணிகர்கள் முதல்வரிடம் வலியுறுத்தல்
By DIN | Published On : 03rd July 2019 07:47 AM | Last Updated : 03rd July 2019 07:47 AM | அ+அ அ- |

காரைக்காலுக்கு மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணியை விரைவுபடுத்தவேண்டும் என புதுச்சேரி முதல்வர், பொதுப்பணித் துறை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
காரைக்கால் நிலவணிக உரிமையாளர்கள் நல சங்கத்தினர் புதுச்சேரி முதல்வர் வி. நாராயணசாமி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆகியோரை திங்கள்கிழமை தனித்தனியே சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
இதுதொடர்பாக காரைக்கால் திரும்பிய சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை கூறியது: தற்போது, காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள நிலங்களை லேண்ட் கன்வெர்ஷன் செய்யக் கூடாது எனவும், புதிதாக குடியிருப்பு மனை (லே அவுட்) போடக் கூடாது என்ற சூழ்நிலை இருக்கிறது. இந்த ஆணையை அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.
காரைக்காலில் 1996-ஆம் ஆண்டு மாஸ்டர் பிளான் போடப்பட்டது. இதுவரை அந்த திட்ட விதிகளின் அடிப்படையில் அரசுத் துறைகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இதனால், மத்திய அரசு மூலம் கிடைக்கும் நிதியும் வளர்ச்சிக்கேற்ப கிடைக்கவில்லை. எனவே, புதிதாக மாஸ்டர் பிளான் அமைக்கும் திட்டத்தை புதுச்சேரி அரசு விரைவுபடுத்தவேண்டும்.
காரைக்கால் நகரமைப்புக் குழும அலுவலகத்தில் இதுவரை விண்ணப்பித்திருந்த 3,500 விண்ணப்பங்களில் சுமார் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே கடந்த 6 மாத காலத்தில் அப்ரூவல் வழங்கப்பட்டுள்ளது. ஏராளமான விண்ணப்பங்கள் பரிசீலனையிலேயே உள்ளன. இவற்றை தீர்வு செய்ய அரசு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்த கோப்புகள் துணை நிலை ஆளுநரிடம் ஒப்புதலுக்காக இருப்பதாகவும், இதன் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுமென முதல்வர், அமைச்சர் தெரிவித்தனர். நில வணிகம் காரைக்காலில் பல்வேறு நிலையில் பாதித்திருக்கிறது.
இவற்றின் மீது ஆட்சியாளர்கள் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். காரைக்கால் வளர்ச்சிக்கேற்ப நிதியாதாரத்தைப் பெற மாஸ்டர் பிளான் போடும் திட்டத்தை விரைவுப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டோம்.
இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். துணை நிலை ஆளுநரும் இந்த விவகாரத்தில் காரைக்கால் மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்றனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G