டெங்கு விழிப்புணர்வுப் பிரசாரம் தொடக்கம்
By DIN | Published On : 03rd July 2019 07:49 AM | Last Updated : 03rd July 2019 07:49 AM | அ+அ அ- |

காரைக்காலில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார ஊர்தி செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.
புதுச்சேரி நலவழித் துறை தலைமை அலுவலகத்தின் மூலம் காரைக்காலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட டெங்கு விழிப்புணர்வு பிரசார ஊர்தியை, காரைக்கால் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநர் மருத்துவர் கே. மோகன்ராஜ் கொடியசைத்து இயக்கி வைத்தார்.
இந்த ஊர்தி காரைக்கால் மாவட்டம் முழுவதும் 7 நாள்கள் டெங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்ய உள்ளது. பிரசார ஊர்தியை சுற்றி டெங்கு காய்ச்சல் ஏற்பட காரணமாக உள்ள கொசு குறித்தும், அது எவ்வாறு உருவாகிறது, அதை தடுக்கும் முறைகள், காய்ச்சல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி பெறவேண்டிய ஆலோசனைகள் உள்ளிட்ட கருத்துகள் டிஜிட்டல் பதாகைகள் முலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, துணை இயக்குநர் மோகன்ராஜ் கூறியது: இந்த வாகனம் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளிலும், பொது மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களிலும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி டெங்கு பிரசாரத்தை மேற்கொள்ளும். வர்த்தகர்கள், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள பொருள்களை அப்புறப்படுத்தியும், சுற்றுபுறங்களில் தண்ணீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். முழுமையான விழிப்புணர்வுடன் செயல்பட்டால், வரும் மழை காலத்தில் டெங்கு காய்ச்சல் இல்லா காரைக்காலை உருவாக்க முடியும் என்றார். ஊர்தி இயக்க நிகழ்வின்போது நலவழித்துறை நோய்த்தடுப்பு தொழில்நுட்ப உதவியாளர் சேகர், பொது சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி சுகாதார ஆய்வாளர்கள் ஆண்ட்ரூஸ், சிவவடிவேல் சுகாதார உதவியாளர்
செல்வமதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.