துணை நிலை ஆளுநர் தமது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் - திமுக
By DIN | Published On : 03rd July 2019 07:47 AM | Last Updated : 03rd July 2019 07:47 AM | அ+அ அ- |

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமது போக்கை மாற்றிக்கொள்ளவேண்டும், இல்லையெனில் ஆளுநர் மாளிகை முன் திமுக போராட்டத்தில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காரைக்காலில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம், காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச். நாஜிம் கூறியது: தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் துன்பத்தை சந்தித்து வருகின்றனர். அரசின் கவனத்தை ஈர்க்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் பல கட்ட போராட்டத்தை அறிவித்து, அதைத் தொடர்ந்து சட்டப் பேரவையிலும் தமது எதிர்ப்புகளை பதிவு செய்துவருகிறார்.
இந்த சூழலில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த துணை நிலை ஆளுநர் ஒரு கருத்தை சுட்டுரையில் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருக்கும் கருத்து, அவர் வகிக்கும் பதவிக்கு உகந்தது அல்ல. புதுச்சேரியில் ஆளுநர் பதவி வகிக்கும் ஒருவர், தமிழக மக்களை தரக்குறைவாக பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நமது மக்களைப் பற்றி, அவர்கள் சுயநலக்காரர்கள் என்றும், கோழைத்தனமானவர்கள் என்றும், அணுகத் தெரியாதவர்கள் என்றும் பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
அரசியல் அங்கீகாரம் பெற்ற, அரசியல் சாசனப்படி பொறுப்பேற்றுக்கொண்டுள்ள துணை நிலை ஆளுநர், தனது நிலையை தமிழக மக்களையும், தமிழகத் தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது. சட்டப்பேரவையில் திமுக இந்த கருத்து தொடர்பாக திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தது. புதுச்சேரியிலும் அந்த மாவட்ட அமைப்பாளர் சிவா இந்த பிரச்னை தொடர்பாக போராட்டத்தை நடத்தியுள்ளார். இனி இதுபோன்ற நிலைப்பாட்டை துணை நிலை ஆளுநர் மாற்றிக்கொள்ளவேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பிரச்னைகளை தீர்க்க முடியாத துணை நிலை ஆளுநர், இதுபோல கருத்துகள் பதிவிடுவதை, பேசுவதை நிறுத்திக்கொள்ளாவிட்டால், தமிழகத்தில் திமுக எவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுகிறதோ அதுபோல புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகை முன் திமுக மாபெரும் போராட்டத்தை நடத்தும் என்றார் நாஜிம்.