புதுச்சேரிக்கான நிதி ஆதாரத்தைப் பெற மக்களவையில் குரல் எழுப்புவேன்: எம்.பி. வைத்திலிங்கம் உறுதி

புதுச்சேரி மாநிலத்துக்குத் தேவையான நிதி ஆதாரத்தைப் பெற மக்களவையில்  குரல் எழுப்புவேன் என புதுச்சேரி எம். பி. வைத்திலிங்கம் கூறினார்.


புதுச்சேரி மாநிலத்துக்குத் தேவையான நிதி ஆதாரத்தைப் பெற மக்களவையில்  குரல் எழுப்புவேன் என புதுச்சேரி எம். பி. வைத்திலிங்கம் கூறினார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கட்சி சார்பில் போட்டியிட்டு புதுச்சேரி மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வெ. வைத்திலிங்கம்,  காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க 3 நாள் பயணமாக சனிக்கிழமை காரைக்காலுக்கு வந்தார்.
பின்னர், நெடுங்காடு தொகுதியில் நன்றி தெரிவிக்கும் சுற்றுப் பயணத்தை தொடங்கிய அவர்,  கோட்டுச்சேரியில் செய்தியாளர்களிடம் கூறியது:
காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது. அதை எதிர்த்துப் போராடுவோம் என புதுச்சேரி முதல்வர் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, இத்திட்டம் இங்கு வராமல் தடுப்பதற்கான நடவடிக்கையை மாநில அரசு எடுக்கும். நானும் அதற்கு உறுதுணையாக இருப்பேன். புதுச்சேரிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பெறுவதற்காக கூட்டு முயற்சியாக காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஒன்றாக இணைந்து மக்களவையில் குரல் எழுப்பும். புதுச்சேரிக்குத் தேவையான  நிதி ஆதாரங்களைப் பெறுவது, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவது ஆகிய இரண்டும்தான் முக்கியமான நோக்கங்கள் ஆகும். இதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம். 
மக்களுக்கு உண்டான உரிமை என்பதும், மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் அரசு அமைய வேண்டும் என்பதும்தான் மாநில அந்தஸ்து. இது அரசுக்கான அதிகாரம் என்பதல்ல, மக்களுக்கான அதிகாரம் என்பதைத்தான் குறிப்பாகச் சொல்ல வேண்டும். அந்த வகையில் மக்களுக்கான உரிமையை வாங்கித் தருவதுதான் எங்கள் கடமையாகும். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாற்றம் என்பது நம் கையில் இல்லை. ஆனால், நமக்கான உரிமைகளை நாம் கேட்போம் என்றார் அவர்.
தேர்தல் முடிவுக்குப் பின்னர் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதை நீங்கள்தான் பார்க்க வேண்டும் என்றார் வைத்திலிங்கம்.
தொடர்ந்து பூவம், வரிச்சிக்குடி, காளிக்குப்பம், கோட்டுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்றவாறு வாக்காளர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். 
இந்த சுற்றுப்பயணத்தில் புதுச்சேரி நலத் துறை அமைச்சர் எம். கந்தசாமி, புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com