குழந்தைத் தொழிலாளர் விழிப்புணர்வுப் பேரணி
By DIN | Published On : 14th June 2019 07:41 AM | Last Updated : 14th June 2019 07:41 AM | அ+அ அ- |

குழந்தைத் தொழிலாளர் குறித்த விழிப்புணர்வுப் பேரணி திருவேட்டக்குடியில் புதன்கிழமை நடைபெற்றது.
குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி காரைக்கால் சைல்டு லைன் மூலம் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருவேட்டக்குடி சோனியாகாந்தி நகரில் பேரணி உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
சைல்டு லைன் காரைக்கால் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி. விமலா, சைல்டு லைன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும், குழந்தைகள் பாதுகாப்புக்கான 1098 என்ற தொலைபேசி தொடர்பு குறித்தும், குழந்தைத் தொழில் மூலம் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற காரைக்கால் தொழிலாளர் துறை அதிகாரி எஸ்.கே.செந்தில்வேலன், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். சோனியாகாந்தி நகரைச் சேர்ந்த சிறுவர்கள், பேரணியில் பங்கேற்று விழிப்புணர்வு கருத்துகளை கோஷமாக எழுப்பியவாறு சென்றனர். முக்கிய வீதிகளின் வழியே இந்த பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சோனியாகாந்தி நகரைச் சேர்ந்த கிராமவாசிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை சோனியாகந்தி நகர் புதிய பறவைகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர், சைல்டு லைன் அமைப்பினர் செய்திருந்தனர்.